தீண்டாமை
தீண்டாமை :18
சீர்திருத்தங்கள் மக்கள் மனதில் உருப்பெற வேண்டும். அதை ஒரு சமூகத்தின் பொதுப்புத்தியாக மாற்ற வேண்டும். அது சாமான்ய செயல் அன்று. யுகம் யுகமாய்ப் பேசிய பின்னும் ஒரு அடி தான் நகர முடியும் என்ற அரும் பயணம் அது. காந்திக்கு அது தெரியாததல்ல. எவரை விடவும் மக்களின் மனோபாவத்தை அதிகம் புரிந்து வைத்திருந்தவர் அவர்.
Raipur இல் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே காந்தி உரையாற்றினார்.”இங்கிலாந்தில் உள்ள மக்கள் தம் பணியாட்களை தம்முடைய குடும்ப உறுப்பினர்களைப் போலவே மரியாதையுடன் நடத்துகின்றனர். காண்பதற்கு இனிய காட்சி அது. அவர்கள் வீடுகளுக்குச் செல்லும் போதல்லாம் நான் அதைக் கண்டு மகிழ்ந்து, நானும் அதுபோலவே நடக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
ஆனால் நம் நாட்டின் நிலைமை தலைகீழ். நாம் சாதாரண மக்களை ஒரு போதும் சமமாக நடத்துவதில்லை. அதனால் தான் உங்களுக்காகத் தனிப்பட்ட பிரத்யேகக் கல்லூரிகளும் பள்ளிகளும் கட்டப்படுகின்றன. நீங்கள் மற்றவர்களை விட மேலானவர்களாக உயர்வானவர்களாக உங்களைக் கருதிக் கொள்கிறீர்கள்.
ஆனால், அந்தோ, அவர்களுக்கு மறுக்கப்பட்ட வசதிகளும் வாய்ப்புகளும் உங்களுக்கு வழங்கப்பட்டனவே தவிர, அவர்களை விட எந்தவிதத்திலும் நீங்கள் தனித்தன்மை உடையவர்களோ அல்லது சிறப்பு மிகுந்தவர்களோ அல்ல.
இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர் இராணுவத்திலும் கப்பற்படையிலும் சாதாரண வீரர்களைப் போலப் பணிபுரிகிறார்கள். சாதாரண மக்களுடன் கலந்து பழகி அனுபவம் பெறுகிறார்கள். நீங்களும் அவ்வாறு பழக வேண்டும். தீண்டாமை என்பதை அடியோடு அழிக்க முயல வேண்டும்.பிறப்பின் காரணமாக எந்த உயர்வு தாழ்வும் இல்லை.”
செல்வந்தர்கள் பயிலும் பிரத்யேகக் கல்லூரியில் காந்தி இவ்வாறு உரையாற்றினார்.
இடிப்பாரை இல்லாத சமூகம் சீர்கெடும். காந்தி இடித்துரைக்க என்றும் தயங்காதவர்.
#தீண்டாமை :18
By திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன்