திமுக ஆதரவு தளமான ‘மின்னம்பலத்’திலேயே வந்துள்ள ஒரு செய்தி.
—————-
தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தீபாவளிக்குக் கொடுக்கும் ஸ்வீட் கொள்முதலில் அதிகமான
கமிஷன் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு காலம் காலமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு கிலோ ஸ்வீட் மற்றும் காரம் கொடுப்பார்கள். அதுவும் மிக சுமாராகவே இருக்கும்.
கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தீபாவளிக்குத் தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வழங்க நெய் கலந்த ஸ்வீட்டு ஒரு கிலோ ரூ 500 என்று சுமார் நூறு டன் வாங்கினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
புதிய ஆட்சி அமைத்துள்ள திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ராஜகண்ணப்பன்.
இந்த ஆண்டு தீபாவளி 2021 நவம்பர் மாதம் 4ஆம் தேதி வருவதை முன்னிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு
ஸ்வீட் கொடுக்க யாரிடம் ஆர்டர் கொடுப்பது என ஆலோசித்தனர். இந்த ஆர்டரை பெறுவதற்காக பல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு அமைச்சரை சந்தித்து வந்தார்கள்.
இந்த நிலையில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப் திடீரென்று மூக்கை நுழைத்துள்ளார். அவரே இதுகுறித்து
துறை அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை செய்துள்ளார்.
’கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ ரூ 500 என்று பர்ச்சேஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அதைவிடக்
குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று சிலர் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
ஆனால் அமைச்சரின் மகன் இதை ஏற்கவில்லை. ஆவினைத் தவிர்த்து ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதியை
அழைத்து ஒரு கிலோ ரூ 600க்கு சப்ளை செய்யுங்கள், நெய் கலந்த ஸ்வீட் வழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை,
ஆயில் ஸ்வீட்டாக இருந்தாலே போதும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் 30% கமிஷனும்
பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த ஹோட்டல் நிறுவனமும் சம்மதித்துவிட்டார்கள்.
சுமார் 100 டன் ஸ்வீட்டுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு கிலோ ரூ 600 என்றால் மொத்தம் ஆறு கோடி ரூபாய்
அரசு பணத்தைக் கொடுக்கிறார்கள்.
அதில் 30% என்றால் – ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்” என்று பெருமூச்சோடு
நம்மிடம் பேசினார்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலரே.
அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பலமான சங்கமான சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நயினாரிடம்
இந்த விவகாரம் பற்றிப் பேசினோம்.
”போக்குவரத்துத்துறையில் 1.25 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு தீபாவளிக்கும்
ஊழியர்களே தரமான ஸ்வீட்கள் தயாரித்து ஒரு தொழிலாளிக்கு இரண்டு விதமான சுவீட்களை தலா ஒரு கிலோ கொடுத்து வந்தோம். செலவும் குறைவாகத்தான் இருந்தது,
கடந்த அதிமுக அட்சியில்தான் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஸ்வீட் கடைக்காரரிடம் ஆர்டரைக் கொடுத்து, ஒரு கிலோவை அரை கிலோவாகக் குறைத்து வழங்கி கமிஷனும் பார்த்து வந்தார் அதிமுக அமைச்சர்.
தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் முதல்வர் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஊழல் இல்லாத ஆட்சி இருக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார், ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் கை நீட்டி விடுகிறார்கள்.
அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு ஆவின் மூலமாக ஸ்வீட் வழங்கினால் குறைவான விலையில் தரமானதாக இருக்கும். ஊழல் இல்லாமல் இருக்கும். ஆவினில் கிலோ 420 ரூபாய்தான்.
தனியாரில் ஒரு கிலோ ரூ 600க்கு பர்ச்சேஸ் செய்கிறார்கள். அதாவது கிலோவுக்கு 180 ரூபாய் அதிகமாகக் கொடுத்து
தரமில்லாத ஸ்வீட் வாங்குவதைத் தவிர்த்து, கார்பரேஷன் நஷ்டத்தில் இருக்கும்போது அரசுக்கும் 1.80 கோடியை மீதப்படுத்தலாம். மேலும் ஓர் அரசு நிறுவனத்தின் மூலம் இன்னொரு அரசு நிறுவனமான ஆவின் லாபம் அடையும். அரசு நிறுவனமான ஆவின் இருக்கையில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனியார்களிடம் போவதை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டுத் தடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்…