மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு திறந்த மடல்! – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம்

வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு தெளிந்த முடிவுக்கு வர முடியாமல் திகைப்படையச் செய்வதில், உங்களுக்கு இணை சொல்ல இன்னொ​ருவர் இல்லை!

நீங்கள் அணி மாறுவது குறித்தும் அஞ்சுவது இல்லை; மாறிய பின், முன்பு புகழ்ந்தவர்கள் மீது கடும் விமர்சனக் கணைகளை வீசவும் தயங்குவதும் இல்லை. உங்கள் ஆளுகையில் இருக்கும் வாக்கு வங்கிக்​காக அவர்களும் நீங்கள் எவ்வளவு வசைமாரிப் பொழிந்​தாலும் பொருட்படுத்துவதே இல்லை. ‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர​மாகத் தன்னலம் மட்டுமே உண்டு’ என்ற வாசகத்தை உங்களைப்​போல் வேத மந்திரமாக ஏற்றுக்கொண்டு, செயல்​படுத்துபவர் வேறு ஒருவரும் இல்லை.

கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் உரிய பங்கினை வன்னியர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், சிதறிக்கிடந்த சமுதாய மக்களைச் சலிப்பின்றி சந்தித்து… அவர்களை வலிமைமிக்க ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் நீங்கள். காங்கிரஸிலும், தி.மு.க-விலும் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்​படுத்தப்பட்டவர்களை, உங்கள் தலைமையின் கீழ் ஒன்றிணைத்து, உரிமைக்குப் போராடும் உணர்வை ஊட்டியவர் நீங்கள். உங்கள் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டது தி.மு.க. மாநிலத்தில் 20 விழுக்காடும், மத்தியில் 2 விழுக்காடும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 1987-ல் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று போராடிப் பார்த்தும் பலன் இல்லாததால், ஏழு நாட்கள் தொடர் சாலை மறியல் நடத்தி, எந்த வாகனமும் சென்னைக்கு வரவியலாத சூழலை உருவாக்கி… துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரைப் பறிகொடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உங்கள் இன மக்களைச் சேர்த்த பின்பு உங்கள் வன்னியர் சங்கம், பாட்​டாளி மக்கள் கட்சியாய் 1989-ல் வடிவெடுத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சம வாய்ப்பு கிடைப்பதுதான் சமூக நீதி. அதற்காக, நம் தமிழினம் சாதிரீதியாகப் பிரிந்து நிற்பது சரியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ‘வன்னியர் சங்கம்’ என்று எம் தமிழரில் ஒரு பகுதி மக்களைத் தனித்துக் குறிப்பிடுவதுகூட மிகப் பெரும் தவறு என்று உணர்கிறேன். நீங்களும் அப்படி உணர்ந்துதான், பா.ம.க. அமைப்பைக் கட்ட முனைந்தீர்கள் என்று நம்புகிறேன். பா.ம.க-வின் சட்ட திட்டங்​களிலும், கொள்கைகளிலும் ஓர் இடத்தில்கூட வன்னிய சமூகத்தின் பெயரோ, வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை. தலித்கள், முஸ்லிம்கள், பிற்பட்ட பிற இனத்தவர் பா.ம.க-வின் நிர்வாகிகளாகவும் நியமிக்கப்பட்டனர். உங்கள் கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், சிவப்பு வண்ணம் கம்யூனிஸத்தையும் குறிப்பவை என்று நீங்கள் விளக்கினீர்கள். கம்யூனிஸம், சோஷலிஸம், பெரியாரிஸத்தின் பல கொள்கைகளும், அண்ணல் அம்பேத்கரின் லட்சியங்களும் கலந்த கலவைதான் பா.ம.க. என்று தமிழரிடையே தெளிவுபடுத்தினீர்கள்.

நீங்கள் முன்வைத்த முழக்கங்கள் எல்லாம் சமூக நலன் சார்ந்தவை. ‘தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு, தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு’ என்றும், ‘மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்’ என்றும், ‘புகையிலை ஒழிப்போம், புற்று நோய் தடுப்போம்’ என்றும், ‘வரதட்​சணை ஒழிப்போம், பெண்ணுரிமை காப்போம்’ என்றும் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத பரப்புரையை நீங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவருகிறீர்கள். கட்டுப்பாடற்ற ஊடகங்கள் பெருகி வரும் நிலையில், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பார்க்கும் வகையில் தொலைந்துபோன நம் தொன்மையான கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில், சமரசம் இல்லாமல் பீடுநடை போடும் ஒரே தொலைக்காட்சி உங்கள் ‘மக்கள் தொலைக்காட்சி’ என்று மலை உச்சியில் நின்று நான் முழங்குவேன்.

தாய்மொழிக் கல்வி குறித்தும், சமச்சீர் கல்வி குறித்தும் தொடர்ந்து ஆரோக்கியமான ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருவது, பாராட்டுக்கு உரியது. வட மாவட்டங்களில் தலித்களும், வன்னியர்​களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் மெச்சத்​தக்கவை. இவ்வளவு பெருமைக்குரிய பணிகளில் ஈடுபட்ட நீங்கள், சந்தர்ப்பவாத சாகசத்தின் சிகரம் தொட்டதில்தான் சரிந்து​விட்டீர்கள். எந்த சிகரத்தில் ஏறி நின்றாலும், பக்கத்தில் செங்குத்துச் சரிவைத்தான் பார்க்க முடியும்.

வன்னியர் சங்கத்தை அரசியல் அமைப்பாக்கிய பின்பு, மக்களிடம் சில வாக்குறுதிகளை நீங்கள் வழங்கியது, உங்கள் நினைவுகளில் மெல்லிய ஞாபக மின்னல்களாய் இப்போதும் கண்சிமிட்டக் கூடும்… இல்லையா? ‘அதிகாரம் சார்ந்த எந்தப் பதவியிலும் நான் என்றும் அமர மாட்டேன். என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையும் அரசியல் வாரி​சாக வளர்க்க மாட்டேன். பொதுவாழ்வில் ஒரு செப்புக் காசையும் சேர்க்க மாட்டேன்’ என்றீர்கள். ‘இன்னொரு பெரியார் உருவாகிறார்’ என்று பலர் வியப்புடன் உங்களைப் பார்க்கத் தலைப்பட்டனர். ஆனால், அன்புமணிக்கு மீண்டும் மாநிலங்களவையில் இடம் கிடைப்​பதற்காக நீங்கள் அணி மாறியதும், கலைஞருக்குக் கடிதம் தீட்டியதும், மகனை மீண்டும் மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க நீங்கள் தவிப்பதும், துடிப்பதும், உங்கள் சித்திரத்தைச் சிதைத்துவிட்டது. தைலாபுரம் தோட்டமும், தற்போது உங்களுக்கு வாய்த்திருக்கும் செல்வ வளமும் நீங்கள் ஒரு வித்தியாசமான அரசியல் வேள்விக்காரர் என்று மக்களை நம்பத் தூண்டவில்லை.

நீங்கள் ஆரம்பத்தில் லட்சியப் பதாகையுடன்தான் தேர்தல் களத்தில் தனித்து நின்றீர்கள். 1989-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 32 தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், 15 லட்சம் வாக்குகளுக்கு மேல் உங்கள் கட்சி பெற்றது ஒரு சாதனை! 1991 சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் உங்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுப் பேரவைக்குள் நுழைந்தார். உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமை உருவானதும், அவரும் நெல்லிக்குப்பம் வி.கிருஷ்ணமூர்த்தியும் கட்சியைக் கைப்பற்ற 5.12.93 அன்று பண்ருட்டியில் சிறப்புப் பொதுக் குழுவைக் கூட்டி, நீங்கள் நியமித்த தலைவர் தீரனையும் பொதுச் செயலாளர் தலித் எழில்மலையையும் நீக்கினர். ஆனால், நீங்கள்தான் கட்சி என்பதை நிரூபித்தீர்கள். 1996-ல் சட்டமன்றத்தில் உங்கள் கட்சியின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இன்று விஜயகாந்த்துக்கு வந்து சேர்ந்த கூட்டணி ஞானம், உங்களுக்கு 1998 தேர்தலில் வந்து சேர்ந்தது. அரசியல் சதுரங்கத்தில் கூட்டணி போட்டுக் காய்களை வெட்டும் கலை உங்கள் கைவசமானது. அன்று முதல் இன்று வரை நீங்கள் ஆடும் அரசியல் ஆட்டம், திடீர்த் திருப்பங்கள் கொண்ட திரைப்படங்களைவிட, பார்வையாளர்களின் கூடுதல் கவனத்தைக் கவர்ந்துவிட்டது!

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அணி மாறுவது இயல்புதான். ஆனால், அணி மாறுவதையே ஓர் அரசியல் சாகசமாக்கியவர் நீங்​கள் ஒருவர்தான்! 1998-ல் அ.தி.மு.க. அணி. 99-ல் தி.மு.க. அணி. 2001-ல் அ.தி.மு.க. அணி. 2004-ல் தி.மு.க. அணி. அடிக்கடி அணி மாறியதில் உங்களுக்கே சலிப்பு வந்துவிட்டது போலும். 2006-ல் தி.மு.க. அணியிலேயே நின்றுவிட்டீர்கள். ஒரே இடத்தில் இருப்பது உங்கள் இயல்புக்கு விரோதம் என்று நீங்கள் உணர்ந்ததும், 2009-ல் அ.தி.மு.க. அணிக்கு மாறினீர்கள். உங்கள் இலக்கணப்படி 2011-ல் திரும்பவும் தி.மு.க. அணிக்குத் திரும்பிவிட்டீர்கள். தேசிய அளவில் பி.ஜேபி. கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் அடுத்தடுத்து இடம் பிடித்து, மத்திய அமைச்சரவையில் 10 ஆண்டுகள் தலித் எழில்மலை முதல் மகன் அன்புமணி வரை அமைச்சர்களாக நீடித்து, அடையவேண்டிய ஆதாயங்களையும் அடைந்துவிட்டீர்கள். ஆனால், ஒரு நல்ல செய்தி, நீங்கள் ரயில்வே துறையில் அமைச்சர்களாக்கிய ஏ.கே.மூர்த்தியும், வேலுவும் தமிழகம் பயன் பெறுகிறாற்போல் தங்கள் பதவியைப் பயன்​படுத்தினார்கள். உங்கள் மகன் அன்புமணி புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை, உயிர் காக்கும் மருந்துகளின் விலைக் குறைப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னேற்றம், உயர் கல்வி நிலையங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ்., ஏ.ஐ.எம்.எஸ். ஆகியவற்றில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, உயிர்காக்கும் ‘108’ ஆம்புலன்ஸ் என்று நேர்த்தியான நிர்வாகத் திறனோடு மிக இளம் வயது அமைச்சராய் சாதனைகளை நிகழ்த்தினார். ஆனால், ‘சாதனைகள்’ அவற்​றோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று கேள்வி!

பழையனவெல்லாம் போகட்டும், உங்கள் நிகழ்கால நடவடிக்கைகளுக்கு வருவோம். கலைஞரோடு கூட்டணி அமைந்து, உங்க​ளுக்கு 31 தொகுதிகள் கிடைத்ததும் கோபாலபுர வாசலில் நின்றபடி ‘இது வெற்றிக் கூட்டணி’ என்று வாய் மலர்ந்தீர்கள். 2009 – நாடாளுமன்றத் தேர்தலின்போது போயஸ் தோட்டத்தில் ‘அன்புச் சகோதரி’யை சந்தித்துவிட்டு, ‘இது வெற்றிக் கூட்டணி’ என்று நீங்கள் ஆரூடம் கணித்தீர்களே… அதுதான் பொய்த்துப்போனது. ஓ… இதுவும் பொய்த்துப் போகுமோ?

தைலாபுரம் தோட்டத்தில் கூடிய பா.ம.க. பொதுக் குழு, ‘கலைஞரை ஆறாவது முறை முதல்வராக்க உறுதிபூண்டு இருப்​பதாக’வும், ‘கலைஞர் ஆட்சிக்கு 5 ஆண்டு​கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்​போவ​தாக’வும், ‘யார் முதல்வராக வேண்டும் என்பதுதான் முக்கியம்’ என்றும் தீர்மானம் தீட்டியிருக்கிறது.

2006-ல் ஐந்தாவது முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏழை – அடித்தள மக்க​ளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஏராள​மான வளர்ச்சித் திட்டங்களை நடை​முறைப்​படுத்தியதாகவும் பொதுக் குழு பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது. எனக்கு ஓர் ஐயம்… தி.மு.க-வுடன் இருந்த உறவை 2008-ல் முறித்துக்கொண்டு அன்புச் சகோதரியுடன் ஐக்கியமானபோது, ‘கலைஞர் அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் தங்களால் தர முடியும்?’ என்ற கேள்விக்கு ‘பூஜ்யம்’ மதிப்பெண் போட்டீர்களே… அன்று சொன்​னது உண்மை இல்லையா? வெறுப்பிலும் விரக்தியிலும் வெளிப்படுத்திய மதிப்பீடா? இன்று மட்டும் நீங்கள் உண்மை சொல்வதாக நாங்கள் எப்படி நம்ப முடியும்?

‘லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறும். தேர்தல் முடிந்​ததும் தமிழக அரசியலிலும், தி.மு.க. ஆட்சி​யிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்’ (27.04.09) என்றீர்கள். நீங்கள் இடம் மாறப்​போவதைத்தான் சூசகமாக அப்படிச் சொன்​னீர்களோ!

‘டாஸ்மாக் நிறுவனம் 12,300 கோடி லாபத்தில் இயங்குவதாக தி.மு.க. அரசு சொல்கிறது. அது ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம்’ (9.1.11) என்று உண்மை உரைத்தீர்கள். இரண்டு முறை பல அமைப்புகளுடன் சென்று கலைஞரிடம் மதுவிலக்கு வேண்டி கோரிக்கை வைத்தீர்​கள். படிப்படியாக மதுக் கடைகளை மூடுவதாக முதல்வர் அறிவித்தார். நீங்கள் சந்தித்துவிட்டு வந்த பின்புதான் ஆறு புதிய சாராய ஆலைகளுக்கு நம் முதல்வர் அனுமதி வழங்கினார்! ஆனால், ‘மதுவை ஒழிப்போம்; மக்களைக் காப்போம்’ என்று முழங்கும் நீங்கள், கலைஞரை முதல்வராக்க முடிவெடுத்துவிட்டீர்கள். நன்றாகத்​தான் அரசியல் நடத்துகிறீர்கள், ஐயா மருத்துவரே!

பென்னாகரம் இடைத்தேர்தலில் வன்னியர் சக்தியை ஒன்றுதிரட்டி 41 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் நீங்கள் பெற்றது, பெரிய சாதனை. தி.மு.க. வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘பணநாயகம் வெற்றி பெற்று ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது. தேர்தலை வணிகச் சந்தை​யாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும்…’ என்று அழகாகச் சொன்னீர்கள்.

ஆங்கிலப் படைப்புலக மேதை கோல்ட் ஸ்மித் பற்றி ஒரு விமர்சகன், ‘இவன் தேவனைப்போல் எழுதுகிறான். ஆனால், சாத்தானைப்போல் பேசுகிறான்’ என்று குறிப்பிட்டான். அது ஏனோ இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

உங்கள் மகன் அன்புமணி விழுப்புரத்தில் நடந்த மாவட்டப் பொதுக் குழுவில், ‘பென்னாகரம் ஃபார்முலாவைப்போல் இனி விஞ்ஞானபூர்வமாக அரசியல் பணி ஆற்றுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். திருமங்கலம் ஃபார்முலா என்பது பணப் பட்டுவாடா! பென்னாகரம் ஃபார்முலா என்பது சாதிக் கட்டுப்பாடா? எங்கே போகிறது தமிழகம், மருத்துவரே?

வன்னியத் தமிழர்கள் 50 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக மாற்றியவர் நீங்கள்தான். ஒரு கோடிக்கு மேற்பட்ட வன்னியர்கள் இருப்பதாக அடிக்கடி ஆதாரம் தருகிறீர்கள். ஆனால், 1989 தேர்தலில் 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளைப் பெற்ற உங்கள் பா.ம.க. 2006 சட்டமன்றத் தேர்தலில் 18 லட்சத்து ஆயிரத்து 749 வாக்குகளைப் பெற்றது. அப்படியானால், பெரும்பான்மை வன்னியர்கள் வாக்கு முற்றாக உங்களிடம் இன்னும் வந்து சேரவில்லை. அவர்களது நம்பிக்கையைப் பூரணமாகப் பெறுவதற்குத்தான் சகலரும் சங்கமிக்கும் பா.ம.க-வை நீங்கள் மீண்டும் வன்னியர் சங்கமாகவே சுருக்கிவிட்டீர்கள். ஒரு பக்கம் பெரியாராகவும், மறுபக்கம் கார்ல்மார்க்ஸாகவும், இன்னொரு பக்கம் அம்பேத்கராகவும் தன்னைக் காட்ட முயன்று, அது முடியாமற்போய் மருத்துவர் ராமதாஸாகவே நீங்கள் நின்றுவிட்டீர்கள்.

இதை எல்லாம் சொல்வதால் என் மீது கோபம் வரலாம். அம்மாவுக்கு நான் ஆள் பிடிப்பவனும் இல்லை. ஐயாவுக்கு வால் பிடிப்பவனும் இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, வலிமை மிக்க மூன்றாவது அணி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அதற்காகவே, 1969 முதல் 1998 வரை என் இளமை முழுவதையும் இந்திராகாந்தியின் குடும்ப அரசியலை எதிர்ப்பதிலேயே நான் செலவழித்தேன். நேர்மை சார்ந்த அரசியலைத் தவிர வேறு எந்த நாட்டமும் என்றும் எனக்குள் இருந்தது இல்லை. பெரிய அரசியல் மாற்றத்தை ஒட்டுமொத்த தமிழ் சாதிக்கும் கொண்டுவருவீர்கள் என்று நம்பியது பிழையாய்ப் போனது. நீங்களும் குடும்ப அரசியலும், சாதிக் கண்ணோட்டமும்கொண்டவராய் குறுகிப்போனது வருத்தம் தருகிறது.

‘பொய் சொல்லவும், ஏமாற்றவும், திருடவும் உனக்குத் தெரியவில்லை என்றால், அவற்றைக் கற்க உன் பார்வையை அரசியல் பக்கம் திருப்பு’ என்றார் அறிஞர் பில்லிங். தமிழகத்தில் இன்று அதுதான் நடந்துகொண்டு இருக்கிறதோ..?

இப்படிக்கு,

தமிழினம் முழுமைக்கும் நீங்கள் தலை​வராக முயல வேண்டும் என்று விரும்பும்,

தமிழருவி மணியன்