மேற்கோள்

அங்கீகாரம்

  • எப்போது நம்முடைய பணியை நம் மகிழ்ச்சிக்காக செய்கிறோமோ அப்போது அங்கீகாரங்கள் அவசியமல்ல. நம்மிடமிருந்து கிடைக்கிற அங்கீகாரம் அடுத்தவர்களுடைய ஒப்புதலைக காட்டிலும் முதன்மையானது, மேன்மையானது.
  • பல நேரங்களில் ‘பிரபலம்’ என்கிற கடுதாசி தவறான முகவரிக்கே போய்ச் சேர்ந்து விடுகின்றது.

அழகு

  • தான் அழகு என்று நினைக்காதபோதுதான் அழகு அரும்ப ஆரம்பிக்கிறது.
  • அழகுக்கும் அருவருப்புக்கும் இடையில் இருக்கிற இடைவெளி மயிரிழையைக் காட்டிலும் மெல்லியது என்பதை உணர்த்தத்தான் அசிங்கமான கூட்டுப் புழுவில் இருந்து வண்ண மயமான பட்டாம் பூச்சியை இயற்கை சிறகடிக்கச் செய்கிறது.

அறிவு

  • கல்லில் வேண்டாத பகுதிகளை நீக்க, சிற்பம் அகப்படுவது போல, நமக்குள் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கிச் சான்றோரானால் என்ன என்று முயற்சி செய்து பார்க்கலாம்.

ஆசிரியர்கள்

  • தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாகத் திகழமுடியும்.

ஆன்மிகம்

  • கடவுள் நம்மைக் காப்பாற்றட்டும். நாம் கடவுளை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை.
  • நம்முடைய பிரார்த்தனை என்பதே புகார்ப் பட்டியல்தான்.

இசை

  • எல்லா இசையும் நமக்குள் நிரம்பிக்கிடக்கும் இசையை வெளியே கொண்டுவரத்தான்.
  • இசையில் இருக்கும் இசையைக் காட்டிலும் அவற்றின் இடைவெளியில் இருக்கும் இசை மிகவும் முக்கியமானது. அந்த மவுனமே இசையைத் தீவிரப்படுத்துகிறது.

இயற்கை

  • மரமே புனிதமானதுதான். அது காற்றையே ஹோமப் புகையாகவும், மழையையே மங்கள தீர்த்தமாகவும் அனுப்பும் மகத்தான மண்ணின் சீதனம். இயற்கையின் நூதனம், இருத்தலின் சாதனம்.

இலக்கியம்

  • இலக்கியவாதி என்பவர் இலக்கியத்தை நுணுக்கமாக, நுட்பமாக வியாக்கியானமாகப் பேசுபவர்கள் அல்ல; படிக்கிற இலக்கியத்தின்படி நடக்கிற மனிதர்களே நல்ல இலக்கிய வாதிகள்.

உணவு

  • உணவுப் பொருட்களை வீணடிப்பது என்பது வறுமையை உதாசீனம் செய்கிற செயல் மட்டுமல்ல, உழைப்பை அவமதிக்கிற செயலாகவும் கருதப்பட வேண்டும்.

உழைப்பு

  • நமக்கு நாமே முதலாளியாக மாற நினைக்கும்போதுதான் நமக்கு உழைப்பு திருவிழாவாக முடியும்; வியர்வை பன்னீராகக் கருதப்படும். ‘முதலாளி’ என்பது ‘முதல் தொழிலாளி’ என்பதன் சுருக்கம்தான்.
  • சுகவாசிகள் இருக்கும் நாட்டில் விலைவாசியும் அதிகமாகத்தான் இருக்கும்.

கலைகள்

  • சிற்பி நினைப்பதெல்லாம் சிற்பம்தான் தன்னுடைய கையொப்பம் என்று.

குறையும் திருந்தலும்

  • கெட்டவர்கள் திருந்தினால் அவர்களைப் போல் நல்லவர்கள் இல்லை.

சுதந்திரம்

  • பயமற்ற மனமே சுதந்திரமானது.

சுயநலம்

  • சுயநலம் முந்த வைக்கும்; ஆனால் சமயத்தில் முழங்கால்களையே முறித்துவிடும்.

சொல்… வார்த்தை… பேச்சு…

  • சகலநேரமும் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சைக் கேட்பதற்கு யாருமே இல்லை. எப்போதாவது பூக்கின்ற குறிஞ்சி மலரை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நெருஞ்சி பூப்பது ஒரு செய்தியாகக் கூட இருப்பதில்லை.

தன்னை உணர்தல்

  • நேற்று இருந்ததைக் காட்டிலும் இன்று அதிகம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோமென்றால் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று பொருள்.
  • புல்லாங்குழல்கள் எப்போதும் காலியாய்க் கிடக்கின்றன. தான் நிறைந்திருப்பதாய்க் குப்பைத் தொட்டிகள் குதூகலிக்கின்றன.

துறவி…

  • துறந்துவிட்டோம் என்கிற எண்ணத்தையும் துறப்பதே சிறந்த துறவு.

நன்றி

  • நன்றி சொல்வது எல்லோரும் எதிர்பார்க்கிற, ஆனால் தாங்கள் மட்டும் சவுகரியமாக மறந்து போகின்ற ஒரு செயல்.

நாடு… சமூகம்…

  • ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவர்கள் பிரதானப்படுத்தும் நபர்களால் அளக்கப்படுகிறது.

நேர்மை

  • எந்த நாட்டில் குண்டூசி தரமாகச் செய்யப்படுகிறதோ அங்கே ராக்கெட்டுகளும் பாதிவழியில் கடலில் விழவேண்டிய அவசியம் இருக்காது. நேர்மை நம்மைப் பொறுத்தவரை உடையாக இருக்கிறது. அது தோலாக மாறும்போதுதான் நாம் நிமிர்ந்து நிற்கமுடியும்.

பணி

  • மகுடத்திற்காகக் குனிவதும் தலைகுனிவுதானே!

புறக்கணிப்பு

  • நிராகரிக்கப்படுபவர்கள் எல்லாம் நிராயுதபாணிகள் அல்லர். அவர்களே நிற்கக் கூடியவர்கள், நிமிரக் கூடியவர்கள், நிலைக்கக் கூடியவர்கள்.

மானுடம்

  • குஞ்சு பொரிக்காத முட்டைகளையும், விதையில்லாத பழங்களையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தபோதே முதியோர் இல்லங்கள் பெருகத் தொடங்கிவிட்டன.

முதுமை

  • முதுமை உடலோடு தொடர்புடையது. முதிர்ச்சி மனதோடு தொடர்புடையது.

மௌனம்

  • பேசாமலேயே புரிய வைப்பதே சிறந்த மொழியாளுகை.

வரலாறு

  • வரைபடத்தில் உள்ள கோடுகளை விரிவாக்கும் தகராறுதானே உலக வரலாறு?

வன்முறை

  • வீரம் வெட்டுவதில் இல்லை; கட்டுவதில் உள்ளது. வீழ்த்துவதில் இல்லை; வாழ்த்துவதில் இருக்கிறது. உடைப்பதில் இல்லை; உண்டாக்குவதில் உள்ளது. நொறுக்குவதில் இல்லை; உருவாக்குவதில் அடங்கியிருக்கிறது.
  • நாம் பூக்களைத் தூவினால் அவை மாலையாக வருகின்றன; நாம் கற்களாக எறிந்தால் அவை காயங்களாக நமக்கே திரும்பி வருகின்றன.

வெற்றி

  • ‘வெற்றிக்கும்’ ‘வெறி’க்கும் ஒரு சின்ன ஒற்று மட்டுமே வேறுபாடு என்பதைச் சற்று உற்றுநோக்கினால் உணர்ந்து கொள்ளலாம்.