இந்த செய்தி உண்மையை இருக்கும் பட்சத்தில், இதுபோதுமே ஒரு புரட்சியை கொண்டுவர!!!,
என்ன நண்பர்களே, இது தேர்தல் நேரம் நாம் காசு பெரும் வழியை பார்போம் எதற்காக இந்த இரண்டு லட்சம் விவசாயுகள் பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும் என்கிறிர்களா, அதுவும் உண்மைதான்!
Source : http://tamilcharam.net/free-electricity-scams-in-india/
எங்கு பார்த்தாலும் தோண்டத் தோண்ட ஊழல். ஊடகங்களில் ஊழல் பற்றிய செய்தி இல்லாத நாளே கிடையாது. ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி பேசாத எதிர்கட்சிகளே கிடையாது.
பெரும்பாலும் பிரபல ஊடகங்கள் அனைத்தும் அரசியல் சார்புடையதாகவே இருக்கின்றன. இதனால் ஊழலின் முழு பரிமாணத்தையும் மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை.”கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்ற பெண் கைது, கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு” இப்படி தினத்தந்தி பாணியில் ஊழலையும் பரபரப்பு செய்தியாக்கி முடித்துக் கொண்டு அடுத்த பரபரப்பு செய்திக்குத் தாவி விடுகின்றன ஊடகங்கள்.
அடுத்த தேர்தலில் ஆளும்கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் ஒரே நோக்கத்ற்காக மட்டுமே ஆளும் கட்சியின் ஊழலை தொண்டை கிழிய கத்துகின்றன எதிர்கட்சிகள். ஆட்சியைப் பிடித்தவுடன் இவர்களின் காட்டுக்கத்தலும் முடிவுக்கு வந்தவிடுகின்றன.
இப்பொழுது இந்தியாவில் அலசப்படும் ஊழல்கள் எல்லாம் கார்பரேட் ஊழல்கள். அதாவது மிகப்பெரும் நிறுவனங்கள் தொடர்புடைய ஊழல்கள். இத்தகைய ஊழல்கள் மிகவும் அபாயகரமானவை. நாட்டையே திவாலாக்கும் வகையிலான ஊழல்கள். நாட்டையே மொட்டையடிக்கும் இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு மட்டுமல்ல தேசத் துரோக குற்றச்காட்டின் கீழும் வழக்குத் தொடரவேண்டும். வழக்குத் தொடர்ந்தாலும் இவர்களை தண்டித்துவிடமுடியாது என்பது தனிக்கதை.
துனிசியாவிலும், எகிப்திலும் ஊழல் அதிபர்களுக்கெதிராக மக்கள் எழுச்சி அதிபர்கள் தப்பி ஓட்டம். அடுத்து ஏமனும், அல்ஜீரியாவும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு நாடுகளிலெல்லாம் எழுச்சிகள் நடக்கும் போது இந்தியா மட்டும் மௌனமாய் பயனிக்கிறது. ஊழல் செய்தவன் உல்லாசமாய் பவனி வருகிறான். இங்கே தேர்தலுக்குத் தேர்தல் ஆளை மாற்றுகிறோம். ஊழலைப் பரவலாக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறோம். இது இந்திய ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கம் மிகப்பெரிய ஜனநாயக உரிமை. இது உரிமை மட்டுமல்ல நமது கடமையும்கூட. இதைத்தானே அப்துல் கலாம்களும், ஷேசன்களும் நமக்கு போதித்துள்ளார்கள். நாம் சான்றோர்களுக்கு கட்டுப்பட்டவர்களாயிற்றே.
நாம் உழைத்துச் சேர்த்த சொந்தப் பணத்தை ஒரு அதிகாரி இலஞ்சமாக நம்மிடமிருந்து பிடுங்கும் போது உள்ளம் குமுறுகிறது. கோபம் வருகிறது. கையூட்டு கேட்பவனை கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க வேண்டும் என மனம் கணக்குப் போடுகிறது. ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு எச்சிலை விழுங்கிக் கொள்கிறோம். நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்தால்கூட இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் காரியம் கைக்கூடாமல் நமக்கு மிகப்பெரிய பாதிப்புகள் வருகிறது. இது ஒரு கையறு நிலை. ஊழலுக்கெதிராக போராட மறுக்கும் கையாளாகாத்தனம் என்று சொன்னாலும் இதுதானே எதார்த்தம்.
இந்த ஆண்டு 2 00 000 பம்பு செட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அரசு அறிவித்து அதற்கான முதற்கட்ட வேலைகளெல்லாம் ஒருமாத காலக்கெடுவிற்குள் முடிந்து விட்டன. இதற்காக விவசாயிகளின் கோவணத்திலிருந்து உருவப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ 2000, இள நிலைப் பொறியாளருக்கு (J.E) ரூ 5000, கண்காணிப்புப் பொறியாளருக்கு (S.E) ரூ 2000, போர்மேனுக்கு (Foreman) ரூ 1000 என இது வரை ஒரு இணைப்புக்கு ஒரு விவசாயியிடமிருந்து ரூ 10000 உருவப்பட்டுள்ளது. ஆக ஒரே மாத்தில், இந்த திட்டத்தில் இதுவரை உருவப்பட்ட இலஞ்சம் மட்டும் ரூ 200 கோடி. மின் கம்பம் நடும் பொதும், மின் இணைப்பு கொடுக்கும் போதும் கொட்டியழ வேண்டியது தனி.
”ஒரு சர்வே எண்ணில் எத்தனை ஏக்கர் நிலம் இருந்தாலும் 2 வது கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது என்றும், ஒரு சர்வே எண்ணில் கிணறுகளுக்கு மின் இணைப்பு வேண்டுமானால், கிணறுகளுக்கான இடைவெளி 150 மீட்டராக இருக்க வேண்டும் என்றும், மின் இணைப்புக்கு மின்துறை குறிப்பிட்டுள்ள மின்மோட்டார்கள் தான் வாங்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.”
இலஞ்சத்தின் அளவை நிபந்தனைகளே தீர்மானிக்கின்றன. இது ஏதோ தோராய மதிப்பீடு அல்ல. இது ஒரு நேரடி அனுபவம். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக மின் இணைப்பு ஏக்கத்தோடு காத்திருந்த சிறு விவசாயிகளின் கோவணத்திலிருந்து சமீபத்தில் உருவப்பட்ட தொகை இது. மற்ற இடங்களில் அதிகமாகத்தான் இருக்குமேயொழிய குறைவாக இருக்க முடியாது.
ஒரு சில இடங்களில் இலஞ்சம் கேட்ட அதிகாரிகளை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அனால் அதன் பின் விளைவு என்ன தெரியுமா? இனி ஜென்மத்திற்கும் அந்த விவசாயிக்கு மின் இணைப்பு கிடைக்காது. அதற்குரிய குறிப்புகளை அடுத்து வரும் அதிகாரி ஆவணங்களில் எழுதி விடுகிறார்.
200கோடி ரூபாய் இலஞ்சமாக விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்துள்ளார்கள் அரசு அதிகாரிகள். ஒரு சிறு திட்டத்தின் மூலமே 200 கோடி என்றால் ஓர் ஆண்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களில் புரலும் கோடிகள் எவ்வளவு? இந்த 200 கோடியைப்பற்றி யாருக்காவது தெரியுமா? கொடுத்தவனுக்கும் வாங்கியவனுக்கும் மட்டுமே தெரியும். அலுவலகத்தில் வைத்து வாங்கினால் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் நிலத்தையும், கிணற்றையும் பார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என்று சொல்லி நிலத்திற்கே சென்று இலஞ்சப் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.அரசு பதவியில் உள்ளவர்கள் கையூட்டில் திளைக்கும் போது பாவம் கைநாட்டு விவசாயி என்ன செய்வான். அவனால் விவசாயிகளைத் திரட்டிப் போராட முடியுமா? முடியாது என்பதே இலஞ்சம் வாங்குவோரின் பலம்.
அரசியல் ஆதாயம் இல்லை என்பதால் தேர்தல் அரசியல் கட்சிகள் இதில் நாட்டம் செலுத்துவதில்லை. நாட்டம் செலுத்தினால் பிறகு அதுவே இவர்களுக்கு ஆப்பாய் அமையும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள்.
எதிரிகளின் பலம் நாம் தனி மரமாய் இருப்பதால். தோப்பாய் மாற உரமிடுவோம். நிச்சயம் ஒரு நாள் உள்ளூர் ஊழலோடு சேர்ந்து கார்பரேட் ஊழலும் காற்றாய் பறக்கும்