பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு

பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு

பொதுவாழ்வில் நேர்மையும், தனிவாழ்வில் தூய்மையும் நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அருகி வருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அரசியல் களம் என்பது தன்னலம் துறந்து மக்கள் நலனுக்காகத் தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்விச்சாலை என்றுணர்ந்து சேவையாற்றிய தலைமுறையின் தளபதியாக விளங்கிய நன்மாறன் அவர்கள் கண்மூடிய செய்தி ஆரோக்கியமான அரசியலை நேசிக்கும் அனைவரையும் கண்ணீரில் நனையவிட்டது. 

பத்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பின்பும் வசிக்க ஒரு வீடின்றி வறுமையில் வாடிய அரிய மனிதர் நன்மாறன். மூச்சு முடியும்வரை ஓர் உண்மையான கம்யூனிஸ்டாக ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய மகத்தான மனிதர் அவர். ஒரு மார்க்சியவாதி எப்படியிருக்க வேண்டும் என்பதை வார்த்தைகளில் விளக்காமல் செயல் வடிவத்தில் வாழ்ந்து காட்டிய தோழர் நன்மாறனை இன்றைய இளைய சமுதாயம் நெஞ்சில் வைத்துப் போற்ற வேண்டும்.

அவரோடு பல மேடைகள் பகிர்ந்து கொண்டவன் நான். நகைச்சுவை இழையோட சமூக அவலங்களை அவரைப் போன்று விமர்சித்தவர்கள் வேறு யாருமில்லை.

அவருடைய இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்ல, பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம்.  

அன்புடன்
தமிழருவி மணியன்