அமைச்சர் பி.ஏ.,விடம் அடி வாங்கிய போலீஸ்

நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், திருச் செந்துார் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் பயன்படுத்தும், அரசுக்கு சொந்தமான ‘இன்னோவா’ கார் நிறுத்தப்பட்டிருந்தது.அங்கு, தலைமை காவலர் முத்துகுமார், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்தார். அவர், இன்னோவா காரை எடுக்க கூறி, டிரைவர் குமாரை வலியுறுத்த, அவர் மறுத்து விட்டார். அருகில் இருந்த ஆட்டோக்காரர்கள் சத்தம் போட்ட பின், காரை தள்ளி நிறுத்தினார். சிறிது நேரத்தில், ஓட்டல் அறையில் தங்கியிருந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், தகவல் தெரிந்து வெளியே வந்தார். போலீஸ்காரர் முத்துகுமாரை கடுமையாக திட்டினார். இருவர் பிடித்துக் கொள்ள, போலீஸ்காரர் முத்துகுமாரை தாக்கினார். அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற முத்துகுமார், பின், கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் காட்டுத் தீயாக பரவ, எஸ்.பி., ஜெயகுமார் சமாதானம் செய்தார். முத்துகுமார் கூறியதாவது:நான் பணிவோடு தான் சொன்னேன். ஆனால், டிரைவர் குமார் என்னை அவதுாறாக பேசினார். கிருபா, என்னை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கி கேவலமாக பேசினார். இரவில், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். நான் ஒரு சாதாரண போலீஸ்காரன். எல்லாமும் முருகக் கடவுள் சன்னிதி பகுதியில் நடந்துள்ளது. இறைவன் தண்டனை கொடுப்பான்.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உதவியாளர் கிருபாகரன் கூறியதாவது:போலீஸ்காரர் முத்துகுமார் தாறுமாறாக பேசியதோடு, டிரைவரிடம் அடாவடியாக நடந்துள்ளார். அதை தான் தட்டிக் கேட்டேன். அப்போது, காரசார விவாதம், தள்ளுமுள்ளு நடந்தது. இதை ஊதி பெரிதாக்கி விட்டார்.தன்னை அடித்ததாக போலீசில் புகார் கொடுத்து விட்டார். பிரச்னை செய்ய விரும்பாததால், இரு தரப்பினரும் சமாதானமாகி விட்டோம். புகார் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இதில், அமைச்சருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்பட்டபோது, எங்கள் மீது போலீசார் வெறுப்பில் இருந்தனர். அந்த வெறுப்புக்கு இப்போது பழிவாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”சென்னையில் இருக்கிறேன். இப்படியொரு சம்பவம் நடந்ததும் தகவல் வந்தது. தி.மு.க.,வினர் எப்போதும் போலீசுடன் இணக்கமாக செயல்படுவர். ”எனவே, போலீசாருடன் மல்லுக்கட்டக் கூடாது எனக் கூறி, ‘பொய் புகார் என்றாலும் கூட பரவாயில்லை; போலீசாரிடம் சுமுகமாக செல்லுங்கள்’ எனக் கூறி விட்டேன். அதன் அடிப்படையில் போலீசாருடன் பேசி சுமுகமாகி விட்டனர். பிரச்னை சுமுகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டது,”
என்றார்.

இது குறித்து, துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயகுமார் கூறும்போது, ”இந்த பிரச்னை, என் கவனத்துக்கு வந்தது. விசாரித்தபோது, நடந்த சம்பவம் உண்மை என தெரிந்தது. நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். ஆனால், புகார் கொடுத்தவர் அதை வாபஸ் வாங்கி விட்டார். ”இரு தரப்பும் சமாதானமாக போய் விட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து விட்டனர். அதனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,” என்றார். காஞ்சிபுரம் மற்றும் திருச்செந்துார் என, இரண்டு பிரச்னைகளும் தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டாலும், தி.மு.க.,வினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இவை வலு சேர்ப்பதாகவே உள்ளன என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.- நமது நிருபர், தினமலம்