தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால், பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை.
அந்தக் குறையைப் போக்கும் வித்தியாசமான நூல் இது.
பயணக் கட்டுரை என்பது பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு அல்லது இடத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை, அங்கு கண்டவற்றையும் உண்டவற்றையும் பற்றி பேசுகிற சுய அனுபவப் பதிவுகளாக அமைந்திருக்கும்.
ஆனால், இந்த நூல் பயணத்தை வரலாற்றின் வெளிச்சத்தில் அணுகுகிற நூல். நாம் அன்றாடம் உண்ணுகிற உணவு, தினம் தினம் காண்கின்ற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாசித்து மகிழ்ந்த இலக்கியம், கேட்டு நெகிழ்கிற இசை, பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஏன் சில விழுமியங்களே கூடப் பயணங்கள் நம் மீது ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாக நேர்ந்தவை. அந்தப் பயணங்கள் நேற்றோ அல்லது நெடுங்காலத்திற்கு முன்போ நிகழ்ந்தவையாக இருக்கலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால் அறிவியலுக்கு நிகராக வாழ்வின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்த சிறப்பு பயணங்களுக்கு உண்டு.
மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.
அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.
சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.
இந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் நீங்கள் பல புத்தகங்களைப் படித்த பயனைப் பெற முடியும் என்பது உறுதி. ஏனெனில் திரு. இறையன்பு இந்தக் கட்டுரைகளை எழுத மேற்கொண்ட முயற்சியின்போது பல நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அந்தக் குறிப்புகளை மற்ற நூல்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொண்டார், பின்னர்தான் அவற்றை உரிய இடத்தில் உரிய முறையில் கட்டுரைகளில் பயன்படுத்தினார்.
இந்தக் கட்டுரைகளை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது, வணங்கத்தக்கது. அரசுப் பணியில் ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் பல பணிகளை ஆற்ற வேண்டிய சூழலில் இருந்தபோதிலும் இதற்கென முக்கியத்துவம் கொடுத்துத் தேடித் தேடி படித்து உழைத்து இந்தக் கட்டுரைகளை அவர் நமக்குத் தந்தார். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அது அவர் ‘புதிய தலைமுறை’ யின் மீது வைத்திருந்த அன்பு. அதற்குத் தலை வணங்குகிறோம்.
‘புதிய தலைமுறை’ வார இதழில் 45 வாரங்கள் வெளிவந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை வளர்த்தெடுப்பது என்பது ‘புதிய தலைமுறை’ யின் நோக்கங்களில் ஒன்று. ‘புதிய தலைமுறை’ யே ஒரு வித்தியாசமான முயற்சிதான். நான் முன்பு சொன்னது போல இந்த நூல் இதுவரை தமிழில் அதிகம் இல்லாத வகையைச் சேர்ந்த நூல். இதனை வெளியிடுவதில் புதிய தலைமுறை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.