புரையோடிய புரிதல்கள் – வெ. இறையன்பு

நெல்சன் மண்டேலா தன்னுடைய சுயசரிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஒருமுறை அவர் விமானத்தில் பயணம் செய்யும்போது அதை ஓட்டிச்சென்ற மாலுமி ஒரு கறுப்பர் என்பது தெரிந்ததும், அவர் சற்றுப்பயந்துவிட்டார். விமானத்தை அவர் சரியாக ஓட்டுவாரா விமானம் விபத்துக்குள்ளாகுமோ என்றெல்லாம் கூட அவர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து, ”அடச்சே” என்ன காரியம் செய்து விட்டோம். நாம் எந்த இலக்குக்காகப் போராடி வருகிறோமோ அதற்கு எதிராக நாமே இப்படிச் சிந்திக்கலாமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இன்னொரு முறை ஓரிடத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி பிச்சையெடுப்பதைப் பார்க்கிறார். அவளுக்கு அதிகப் பிச்சையிடுகிறார். பல கறுப்பின மக்கள் பிச்சையெடுப்பதைப் பார்த்து ஒன்றும் தோன்றாத அவருக்கு ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை அப்படிப் பார்த்ததும் அந்தப் பரிதாப உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

அவரையும் அறியாமல் அவர் ஆழ்மனத்தில் வெள்ளை நிரத்தின் மேன்மையைப் பற்றிய எண்ணம் ஊடுருவிப் பாய்ச்சப்பட்டிருந்ததுதான் இந்த நிகழ்வுக்கு காரணம்.

சில நேரங்களில் நாம் யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறோமோ, அவர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் நமக்கு ஆழ்மனத்தில் பதிந்துவிடுவதுண்டு.

நாம் ஆழ்மனத்தில் பதிந்த பதிவுகளை நாம் உதிர்க்க முடியால் தவிக்கிறோம்.

வெள்ளை நிரத்திலிருப்பவர்களே அழகு என்றும்

ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவு ஜீவிகள் என்றும்

வெளிநாட்டு முத்திரை குத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் உயர்தரமானவை. நம்நாட்டு பொருட்கள் மலிவானவை என்ற எண்ணங்கள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன.

நம்முடைய பொருட்கள் உயர்ந்தவை என்று நாமே நம்பாதபோது மற்றவர்களை எப்படி நம்பவைக்கப் போகிறோம்?

மேல்மனத்தைக் காட்டிலும் உள்மனம் வலிமை வாய்ந்தது. சரியாகச் சமைக்கப்படாத புதுவகை உணவை முதல் முறை உட்கொள்ளும்போது ஜீரணமாகாவிட்டால் நம் ஆழ்மனம் அது குறித்த எதிர்மறைக் கருத்தைப் பதிவுசெய்து கொள்கிறது. அடுத்தமுறை சரியாகச் சமைத்திருந்தாலும் ஆழ்மனத்தின் பதிவு நமக்கு அஜீரண கோளாறை ஏற்படுத்திவிடுகிறது.

அதனால்தான் நாம் நல்ல சிந்தனைகளையே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நல்லவற்றையே தொடர்ந்து எண்ணும்போது ஆழ்மனத்தைத் தூண்டி அவை நமக்கு ஆற்றலையும், உந்து சக்தியையும் தருகின்றன.

ஒரு தேர்வை எழுதுவற்கு முன்பே ஆது சிரமம் என்று பயப்பட ஆரம்பித்தால் அது எதிர்மறையான பதிவுளை ஏற்படுத்திவிடும்.

இந்திய எல்லைப்பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கு கிடைத்த, கொட்டிக் கிடந்த வெளிநாட்டுப் பொருட்கள் வாங்க முனைந்தனர். தெரிந்த நபர் ஒருவர் தென்பட்டார்.

அவரிடம் அவர்கள் “எங்களுக்கு வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டும்” என்றார்கள்.

வெ. இறையன்பு

“எந்த நாட்டு பொருள் வேண்டும்”? என்றார்.

“எந்த நாட்டுப் பொருளும் கிடைக்குமா?”

”எல்லா நாட்டு பொருட்களையும் நாங்கள் செய்துதரத் தயார்” என்றார் அவர்.