நா.முத்துக்குமார், ஆரம்பகாலங்களில் கவிதைத் தொகுப்புகள் மூலம் தன்னை நல்ல கவிஞனாக அடையாளப்படுத்தியவர், மிக மிக எதார்த்தமாக வாழ்வை நோக்கி, குடும்ப அங்கத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், காணுகின்ற சமுதாயக் காட்சிகள் ஆகியவற்றுடன் சிலிர்ப்பாயும் சிராய்ப்பாயும் பெற்ற அனுபவங்களைக் கவிதையாக்கியவர். அந்தரத்துப் படிகளில் ஆகாசக் கோட்டையேறி பிளாஸ்டிக் பூக்களால் தன்னைத் தானே அலங்கரித்து வியக்கும் அருவருக்கத்தக்க போக்கு அவரிடமில்லை. இதுவே ஆரோக்கியத்திற்கு ஓர் அடையாளம். எளிய சொற்கள், வலிந்து கொனாரா மலேயே வருகின்ற ஓசையமைதி இவையே அவரது வலிமைக்கு அடையாளங்கள்.ஒரு நல்ல படைப்பாளி, கரம்பற்றிக் குலுக்குகிறான். விரல்பற்றியும் அழைத்துச் செல்கிறான். அவலங்களில் உடன் அழுகிறான். ஆறுதலாய்க் கண்ணீர் துடைக்கிறான். போர்க்களங்களில் வாள் தருகிறான். வெற்றிக் கணங்களில் மாலை சூட்டுகிறான். பாதையோரங்களில் சிலையாகி படைப்பாளிகள் நிற்பதெல்லாம் பயணம் செல்வோர்க்கு என்றென்றும் வழிகாட்டி நிற்கும் வெற்றியால்தான்! வாழ்த்துகளுடன்.
சில படைப்புக்கள்:
- நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
- கிராமம் நகரம் மாநகரம்
- பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
- ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
- என்னை சந்திக்க கனவில் வராதே
- சில்க் சிட்டி (நாவல்)
- பால காண்டம் (கட்டுரைகள்)
- குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
- வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
- தூசிகள் (கவிதைகள்)
- அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)