மெல்லத் தமிழன் இனி…10 – மதுவிலக்குப் போராட்டம்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார் நண்பர் தனசேகரன். அவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 2,500 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். பெரும்பாலும் இயற்கையாக இல்லை. லாரி மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, தற்கொலை செய்துகொண்டு… இப்படி விதம்விதமாக. அச்சம் தருகிறது அகால மரணங்களின் பட்டியல்.

காரணம், மது அரக்கன். அவர்களுக்கெல்லாம் வயது 30 முதல் 40 வரை மட்டுமே. சாக வேண்டிய வயதா இது? இந்திய ஆண்களின் சராசரி வயதே 64தானே. அதில் பாதியைக்கூட வாழவில்லையே இந்த இளைஞர்கள். அநேகமாக, படித்த பட்டதாரி இளைஞர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் கண்ணீர் வருகிறது.

சோகம் அந்த 2,500 பேருடன் முற்றுப்பெறவில்லை. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கணவனை இழந்திருக்கிறார்கள். சுமார் 5,000 குழந்தைகள் தந்தையை இழந்திருக்கிறார்கள். சுமார் 5,000 அம்மா – அப்பாக்கள் அன்பு மகனை இழந்திருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலமெல்லாம் என்னவாவது? சமீபத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த இரு குழந்தைகளை அடையாளம் கண்டு அதிர்ந்துபோய், வீடு சேர்த்திருக்கிறார் டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.

எது எதற்கோ புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் துறைகள், இதைப் பற்றி புள்ளிவிவரங்களைச் சேகரித்ததா என்று தெரியவில்லை. ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் அலட்சியம். சாவது கடைநிலை ஊழியர்தானே என்கிற இளப்பம்.

குடிநோயாளியாகிவிட்ட சில ஊழியர்களிடம் பேசினால், “பாடப் புத்தகங்களுக்கு நடுவே வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவருக்கே குடியை மறக்க முடியவில்லை. தினமும் காலையிலேயே கடைக்கு வந்து, பாட்டிலுக்கு நடுவே வேலை பார்க்கும் எங்களால் எப்படி முடியும்?” என்று கலங்குகிறார்கள். அவர்களின் கை, கால்கள் வெடவெடவென்று நடுங்குகின்றன. கணிசமான பேருக்கு காலையில் கடையைத் திறந்ததும் ஒரு குவார்ட்டரைக் குடித்தால்தான் நடுக்கம் நிற்கிறது. அப்புறம்தான் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

வட சென்னையில் ஒரு பார். காலையிலேயே கூட்டம் மொய்க்கிறது. ஊழியர்கள் இருவர் மட்டுமே. காலையில் வந்தவுடன் சிறிது நேரம் ஒருவர் எழுத்து வேலை செய்ய வேண்டும். ஒருவர் மட்டுமே விற்பனையைக் கவனிக்க முடிகிறது. தாமதமாவதால் எரிச்சலடையும் குடிநோயாளி ஒருவர், உலகத்தின் உச்சபட்ச கெட்ட வார்த்தைகளையெல்லாம் ஊழியர் மீது பிரயோகிக்கிறார். ஆனால், ஊழியர் முகத்தில் சலனமே இல்லை.

“சொந்த ஊர் கொடுமுடிங்க. ஒருகாலத்துல ‘நீ, வா, போ’ன்னு கூப்பிட்டாக்கூட சுர்ர்ருனு கோபம் வருமுங்க. வேலைக்கு வந்த புதுசுல கோபப்பட்டு அடிதடியாகி, சஸ்பெண்டாகி, சம்பளம் இழந்து நிறையப் பட்டுட்டேன். என்னவோ தெரியலைங்க, இப்பல்லாம் யார் எவ்வளவு கெட்ட வார்த்தையில திட்டினாலும் கோபமே வரமாட்டேங்குது” என்கிறார். பச்சையாகத் திட்டினாலும் கோபமே வரவில்லை என்பதை இங்கு பக்குவப்பட்ட தன்மையாக எடுத்துக்கொள்ள இயலாது. “மன அழுத்தம் அதிகமாகி மூளை மழுங்கிப்போன நிலை இது. வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமல்ல, குடும்பத்திலும் அவர் அப்படித்தான் இருப்பார். என்னிடம் இதுபோன்று நிறையப் பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள்” என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி.

2,500 பேர் இறந்திருக்கிறார்கள். சரி, இருக்கும் மிச்சம் பேரெல்லாம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்களா? இப்போது இருக்கும் சுமார் 30,000 பேரில் சரி பாதிப் பேர் குடிநோயாளிகள்; அதில் பாதிப் பேர் மனநலமும் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். மிகையாகச் சொல்லவில்லை. அவர்களின் பணியிடச் சூழல் அப்படி. பணியிடங்களில் கழிப்பறை வேண்டும் என்பது ஐ.நா. சபை வகுத்த அடிப்படை மனித உரிமை விதிமுறை. எத்தனை மதுக் கடைகளில் கழிப்பறை இருக்கிறது? மதுக் கடைகளே கழிப்பறை போலத்தானே இருக்கின்றன. அங்கேதான் அவர்கள் சாப்பிட வேண்டும். வேலை பார்க்க வேண்டும். வேலை என்றால் 12 மணி நேரம் வேலை. ஷிஃப்ட் கிடையாது. ஆட்கள் பற்றாக்குறை. தீவிர விற்பனை இலக்கு மன உளைச்சல். தீபாவளி, பொங்கல் என்று நல்ல நாட்களுக்குக்கூட குடும்பத்துடன் இருக்க முடியாது. கூடவே, குடி அடிமையாவதற்குக் கூடுதல் சாத்தியங்கள். வகைவகையாக வசவுகள். வயது 40-ஐ நெருங்கியும் பலருக்கும் திருமணம் ஆகவில்லை. பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்.

டாஸ்மாக் ஆரம்பித்ததிலிருந்து இல்லாத அதிசயமாக முதல்முறையாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) மதுவிலக்கை வலியுறுத்திப் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறது. கடந்த காந்தி ஜெயந்தியில் உதித்த புதிய புரட்சி இது. ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என்றுதான் போராடிவந்தார்கள். ஆனால், இன்றைக்கு ஊழியர்களின் தொடர் மரணங்கள், அவர்கள்தம் குடும்பங்களில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழல் ஆகியவை அவர்களை இந்த முடிவை எடுக்கச் செய்திருக்கின்றன.

வேறு வழியில்லை. நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட இங்கு யாருக்கும் நேரம் இல்லை. எப்போதுமே நமக்கான விடிவுக்காலம் நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

(தெளிவோம்)

– டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in