ஜூனியர் விகடன் 17 08 2014
”பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டுவந்தாலும் பயன் இல்லை. அண்டை மாநிலங்களுக்கு மதுவுக்காகச் செல்லத் தொடங்குவார்கள். மதுக்கடத்தல் பெருகும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது” எனச் சொல்லியிருக்கிறார் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியனிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
”தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என்று அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?”
”இந்தியாவிலேயே முதன்முதலாகப் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடுதான். ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் சென்னை மாகாணம் என இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்தபோது, 1937-ல் ராஜாஜி முதன்முறையாக பிரதம அமைச்சராக இருந்தார். அப்போது பூர்வாங்கமாக, தான் பிறந்த சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை பரிசோதனை முயற்சியாக அமல்படுத்தினார். சேலம் மாவட்டத்தில் அறிமுகமானபோது டிக்ஸன் என்ற வெள்ளைக்கார கலெக்டர் ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில், ‘மதுவிலக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும். மிக மிக குறைந்த வருவாய்தான் அரசுக்கு வருகிறது. மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்படும்’ என்றார். அதை ஏற்காமல் ராஜாஜி மதுவிலக்கைக் கொண்டுவந்தார். 1938-ல் பட்ஜெட் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது மீண்டும் சேலம் கலெக்டர் டிக்ஸன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘நீங்கள் முதலில் சேலத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியபோது வருவாய் இழப்பு ஏற்படும் என்ற காரணத்துக்காக எதிர்த்தேன். ஆனால், இந்த ஓர் ஆண்டில் கூலித் தொழிலாளர்கள் மதுக்கடைகளுக்குச் சென்று செலவழித்த பணத்தை, இன்று வீட்டுக்குச் செலவழிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பங்களில் அமைதி நிலவுகிறது. வருவாய் பெருகியிருப்பதற்கு மதுவிலக்குதான் காரணம் என்பதை அறிந்துகொண்டேன்’ என வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.”
”தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கிறாரே அமைச்சர்?”
”மதுக்கடைகளைத் திறப்பதற்கு முன்பு சாராயம் நடைமுறையில் இருந்தது. அப்போது கள்ளச்சாராயம் குடித்து ஒவ்வொரு ஆண்டும் செத்தவர்கள் எத்தனை பேர்? இன்றைக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சாராயத்தின் மூலம் சாவைச் சந்திக்கக் கூடியவர்கள் எவ்வளவு பேர்? இதனை ஒரு வெள்ளை அறிக்கையாக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கத் தயாரா? ஓர் ஆண்டு முழுவதும் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் இறந்து இருந்தால் அதிகம். ஆனால், இன்றைக்கு ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியினால் பாதிக்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும் என அரசு சொல்வது சரியானது அல்ல. தன் கையாலாகாத்தனத்தை, இயலாமையை, கூச்சமற்று ஒரு அரசு வெளிப்படுத்துவது வெட்கத்துக்கு உரியது. கள்ளச்சாராயம் பெருகாமல் தடுப்பதற்கு காவல் துறை உங்களிடம் இல்லையா? 1,000 சட்டங்கள் இருந்தும் திருட்டு நடந்துகொண்டேதான் இருக்கிறது. கொலைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன. அதற்காக திருட்டையும் கொலையையும் ஓர் அரசு நியாயப்படுத்த முடியுமா?
‘ஒரு குழந்தை மண்ணை எடுத்து வாயில் போடுகிறது என்பதற்காக, அவளைப் பெற்ற தாய் தடுக்காமல் விடுவாளா? அதுவும் தமிழகத்துடைய முதலமைச்சராக இருப்பவர் ஒரு பெண்மணி. அவரை பெரும்பாலானவர்கள் ‘அம்மா’ என்று அழைக்கிறார்கள். அம்மா இதனைத் தடுக்க வேண்டாமா?
”அரசுக்கு இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்களே… ஒரே நாளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை அரசாங்கம் இழந்தால் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?”
”1983-ல் டாஸ்மாக்கை உருவாக்கியபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 140 கோடி ரூபாய். இன்றைக்கு 23,000 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. அரசு வரவு செலவு திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த டாஸ்மாக் மூலமாக மட்டும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி ஏழு பேரில் ஒருவர் குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ஏழு கோடி மக்களையும் குடிக்கு அடிமைப்படுத்திவிட்டால், இன்னும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதுதான் இவர்கள் திட்டமா? திடீர் என 23,000 கோடி ரூபாயை ஓர் அரசாங்கம் இழந்தால், எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாதுதான். இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட அரசுக்கு மாற்றுத்திட்டத்தையும் முதன்முதலில் காந்திய மக்கள் இயக்கம்தான் கொடுத்தது. அதில் ஒன்று, வரி சீர்திருத்தம் செய்வது. ஆற்று மணல், கிரானைட், கார்னெட் போன்ற தொழில்களை முறைப்படுத்தினாலே பல்லாயிரம் கோடி வருவாயைப் பெறலாம்.”
– நா.சிபிச்சக்கரவர்த்தி