பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் .. தயவு கூர்ந்து நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள் …….

***************************************************…**********

பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட வெறுப்பு, அரசு அதிகாரிகளின் தமிழின எதிர்ப்புடன் சேர்ந்து மனிதநேயமற்ற முறையில் சந்தை லாபத்திற்காக இந்திய அரசு செயல்பட்டதும் அதன் துணையாக இந்தியாவின் நிறுவங்கள் வேலைசெய்ததையும்/செய்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தமிழினப்படுகொலைக்கு துணையாய் நின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை நாம் தொடர்ச்சியாக கண்டறிந்து அதை எதிர்த்து போராடுவது நமக்கு கட்டாயமாகிறது. இந்த வழியில் நமது எதிர்வினைகள் இந்திய-சிங்கள கூட்டு திட்டங்களை முறியடிக்க கூடியதாய் இருக்க வேண்டும். நமது ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கு நமது தொடர்ச்சியான போராட்டங்கள் உதவும். போர்முடிந்த பிறகு நடத்தப்படும் நமது போராட்டங்களை, புரிதல்களை, குறிக்கோள்களை இந்த அரசாங்ககளுக்கு தெளிவாக உணர்த்தவேண்டி உள்ளது. நமது புரிதல்கள் இனிவரும் காலங்களில் நம்மை, நமது போரட்டஙளை தற்காத்துக்கொள்ள பெரிதும் துணை புரியும். இதன் அடிபடையிலேயே இந்த ஏர்டெல்லிற்கு எதிரான நமது போரட்டம் அமைகிறது. இது நமக்கு வருங்காலத்தில் சரியான புரிதல்களோடு போராட்டம் நடத்தும் பயிற்சியை அளிக்கவும் செய்யும்.

 
6099_263199253816538_374577508_n
இலங்கையில் வர்த்தக போட்டிகளின் நடுவே தமிழீழ தமிழர்களின் உரிமை, விடுதலைப்போராட்டம் பலிகொடுக்கப்படுகிறது. இந்த சதிகளுக்கு நடுவே உரிமைகளை வென்றெடுக்கவும், எதிர்கால சமூக,அரசியல் நலனை உறுதி செய்யவும் வேண்டி இருக்கிறது. இந்த பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாகவும், உறுதியுடனும் நாம் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய கட்டாயத்தை இந்த இக்கட்டான சூழல் நமக்கு ஏற்படுத்தி உள்ளது. லாப நோக்கில் மட்டும் இன்றி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், அரசும் கார்பரேட் நிறுவங்களும் இணைந்து இன்று வேட்டையாட கிளம்புகின்ற இந்த காலகட்டத்தில் அநீதிக்கு எதிராக போராடுபவர்கள் இந்த இரண்டையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டியுள்ளது. ஏர்டெல்லின் சிங்கள கூட்டணியை நாம் புரிந்து கொள்வது இம்மாதிரியான மானுட விரோதிகளை வெற்றி கொள்ள உதவும். இந்த வகையில் ஏர்டெல்லை நோக்கிய புறக்கணிப்பு போராட்டத்தின் அடிப்படை தமிழின விரோதியாக மட்டும் அல்லாமல் மானுடவிரோதியாகவும் இருக்கும் இந்த நிறுவனங்களின் பொருளாதார ஆதாரத்தை முறிப்பதே.
இந்திய-இலங்கை வணிக ஒப்பந்தம்
கடந்த 1998இல் இருந்து பேசி பிறகு கையெழுத்தான இந்திய-இலங்கை சுதந்திர வணிக ஒப்பந்தம் இந்திய நிறுவனங்களுக்கு எதிர்பாராத ஒரு புதையலாகவே இருந்தது. நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழீழம் இப்பொது மாறிக்கொண்டு இருப்பதற்கு முதன்மையாக இருந்தது இந்தியாவிற்கும் இலங்கைக்குமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனங்கள் ஈட்டிய செல்வம். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இரு நாட்டின் வர்த்தகம் 600 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 3000 மில்லியன் அமெரிக்க டாலராக (ஐந்து மடங்காக) மாறியது. (http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=1945769245) இந்த லாபங்களை பார்த்த இந்திய பெரு நிறுவனங்கள் இலங்கையை பெரும் வளர்ந்து வரும் சந்தையாக கண்டுபிடித்தார்கள். சார்க் நாடுகளில் ( தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) இருக்கும் இந்திய முதலீடுகளில் 50% கும் மேலான முதலீடுகள் இலங்கையில் தான் உள்ளன. இதில் முக்கியமாக தொலைதொடர்பு ஒரு முக்கிய பங்கு வகித்ததால் இந்திய நிறுவனங்கள் அங்கு கால்பதிக்க விரும்புகிறார்கள் கிட்டதட்ட நூறுக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அங்கு வணிகம் செய்கின்றன. வரும் ஆண்டில் இந்தியாவின் ரிலையன்சு மற்றும் பல இந்திய பெரு நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அங்குள்ள நிறுவங்களை வாங்கவும், ஒப்பந்தங்கள் போடவும் காத்திருக்கிறார்கள்.
http://www.lankanewspapers.com/news/2009/12/51908.html http://www.projectsmonitor.com/detailnews.asp?newsid=2207 .
சீனாவின் மூலம் பெறும் வர்த்தக மையமாக மாறிய ஹாங்காங்கை போல இலங்கை, இந்தியாவின் ஹாங்காங்காக மாற வாய்ப்பிருப்பதாக ஹாங்காங் வங்கி தெரிவித்தது. இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் வணிக முக்கியதுவம் வாய்ந்த அதன் சந்தை தமிழர்களின் விடுதலைப்போரினால் தடைபட்டு இருந்ததாகவே இந்திய நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த கருத்தை, போர்முடிந்த பிறகு ஏர்டெல்லும், இந்திய கச்சாஎண்ணை நிறுவனமும் தெரிவித்தன. http://www.lankanewspapers.com/news/2010/4/56029_space.html ஆக இந்த நிறுவனங்களின் வணிகத்திற்கும், லாபத்திற்கும், சந்தை விரிவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலை போர் பெரும் தடையாக இருந்தது.
.————————-
வைகோவை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடிக்க காரணாமாயிருந்த கோவில்பட்டியை சேர்ந்த ”மாஃபா பாண்டியராஜனின் நிறுவனமான மாஃபா மனிதவள நிறுவனம் அங்கு தனது சேவையை நீண்ட காலமாக சிறப்பாக செய்து வருகிறது. இவர் தன் பிரச்சாரத்தை தேர்தலிற்கு வெகு நாட்களுக்கு முன்பே ஆரம்பித்தது, வாக்களர்களை கவர்வதற்கு செலவழித்த பணம் இலங்கை அரசின் துணையோடு நடந்து இருக்காது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. (தேர்தலுக்கு பிறகு இவரின் அரசியலில் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று யாராவது அறிவீர்களா?) தமிழீழத்திற்கு ஆதரவாக எந்த ஒரு குரலும் பாரளுமன்றத்தில் வரக்கூடாது என்பது எந்த பேரினவாதத்தின் கனவு?
ஏர்டெல்லும் இலங்கை அரசும்.
பல்வேறு நிறுவங்கள் இலங்கைக்குச் சென்று தொழில் தொடங்கி இருந்தாலும் ஏர்டெல் முதன்மையான புறக்கணிப்பை பெறவேண்டிய காரணங்கள் வலிமையானதாகும். கடந்த மே 17,18 படுகொலைக்கு சரியாக இரண்டு வருடத்திற்கு முன்பு மே 15, 2007ல் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் மொபைல் சேவை மற்றும் இதர நிறுவனங்களை வென்று இலங்கையில் தனது சேவையை ஆரம்பிப்பதற்கான ஒப்புதலை பெற்றது. தனது 2G , 3G சேவையை சோதனை செய்து பார்க்கவும் அதற்கு வாய்ப்பு கிட்டியது . ரிலையன்ஸ், பி. எஸ்.என்.எல், டாடாவை மீறி தனது செல்வாக்கை பயன்படுத்தி எப்படி ஏர்டெல் இந்த ஒப்பந்தத்தை போட்டது. இந்திய அரசாங்க நிறுவனமான பி. எஸ்.என்.எல் ற்கு அளிக்காமல் ஏர்டெல்லிற்கு வழங்கியதையும் இதற்கு ஆதரவாக இந்தியாவின் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் இருந்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இலங்கை அரசிற்கு தேவையான உதவிகளை செய்யாமல் இப்படி ஒரு ஒப்பந்ததை பெற்று இருக்க முடியாது. போர் நிதியாக இலங்கைக்கு ஆயிரத்தி எண்ணூறு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுவதை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. (http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=1930081308) http://contentsutra.com/article/419-bharti-airtel-gets-approval-for-sri-lanka-foray-to-invest-150-million/ .
இலங்கைக்கு தேவையான சீன உறவு, சீன உளவு.
இலங்கை அரசு எவ்வப்போதெல்லாம் அதன் உள்நாட்டு எழுச்சி நடக்கிறதோ அப்பொதெல்லாம் இந்தியாவின் உதவியை வைத்தே அதை வெற்றிகரமாக அடக்கும். அது தமிழீழ விடுதலை போராக இருந்தாலும் சரி அல்லது எழுபதுகளில், எண்பதுகளில் நடைபெற்ற சிங்கள இளைஞர்களின் எழுச்சியாக இருந்தாலும் சரி. ஆனால் ஒவ்வொரு முறையும் இலங்கையை தன் கைப்பிடியில் வைக்கவேண்டும் என்கிற இந்திய அரைகுறை சாணக்கியத்தனம் சிங்கள அரசை களைப்படையச் செய்து இருக்கிறது. இதனால் இந்த போரில் இந்திய அரசை முழுவதும் நம்பாமல் மற்ற அரசுகளை பின்வாசல் வழியாக கொணர்ந்து அவர்களின் ஆதரவை முக்கியமான தருணத்தில் பயன்படுத்துவது என்பது சிங்களத்தின் யுத்த தந்திரத்தின் ஒரு முக்கிய அங்கம். வழக்கம் போல அரைவேக்காட்டு சாணக்கியத்தனமும், இலங்கையால் கைப்பற்றப்பட்ட இந்திய அரசின் முக்கிய அதிகாரிகளும் இந்த தந்திரத்தை நிறைவேற்ற உதவி செய்தன.
ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் வர்த்தக ஒப்பந்தம் வாங்குவதற்கு உதவியாக இருந்தது அந்த நிறுவனத்தில் பெரும் பங்குதாரராக இருக்கும் (http://wirelessfederation.com/news/tag/singtel/) சிங்டெல் நிறுவனமாகும். ஏர்டெல் நிறுவனம் முழுவதும் இந்திய நிறுவனம் என்று சொல்லிவிடமுடியாது. 30.43% சதவிகித பங்குகளை சிங்கப்பூர் நிறுவனமான சிங்டெல் நிறுவனம் வைத்துள்ளது. இதுதவிர சிங்கப்பூர் அரசின் முதலீடும் 5% சதவிகிதம் உள்ளது. ஆகவே ஏர்டெல் நிறுவனத்தை இந்திய நிறுவனமாக நாம் பார்ப்பது சரியான ஒன்றாக இருக்காது.
சிங்டெல் நிறுவனம் ஒரு சிங்கப்பூர் நிறுவனம், இந்த நிறுவனம் சீன அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் ஒரு நிறுவனம். நாம் இங்கு சீனாவை பார்ப்பது கடந்த வருட போரில் இதன் பங்கை நாம் அறிந்து கொள்வது மட்டும் அல்லாமல் தமிழீழ போர் உலகின் வல்லரசுகள் பங்காற்றிய ஒரு போர் என்பதையும், நாம் எத்தகைய புவிசார் அரசியல் நிலையில் இருக்கிறோம் என்பதையும் அறிந்து கொள்வதற்கே. மேலும் சீனாவை நாம் நண்பனாகவோ எதிரியாகவோ பார்க்காமல் இலங்கையில் அதன் நலன்கள் என்ன என்பதையும் நாம் கொள்ளவேண்டும். ஒரு புவிசார் அரசியல் பாடத்தை தமிழர்களுக்கு இந்த போர் கற்று கொடுத்து உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
ஏர்டெல்லின் மூலமாக அதன் பங்காளி நிறுவனமான சிங்டெல் நிறுவனம் மூலம் சிங்க்டேல்லின் பங்காளி ஹுவவெய் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க முடிந்தது . இந்த ஹுவவெய் நிறுவனத்தின் வரவு மிக முக்கியமான நிகழ்வாகும். ஹூவாவெய் என்பது சீனாவின் முன்னணித் தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பு நிறுவனமாகும். அந்த நிறுவனம் இந்தியாவில் பெங்களூரில் 1999 ஆம் ஆண்டிலிருந்து தன் அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் சீன உளவு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனமென்று இந்திய உளவு நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் அறிவித்தன. உலகமயமாதல் காய்ச்சலில் இந்தியா உச்சபட்சமாக பீடிக்கப்பட்டிருந்த காலம் அது என்ற காரணத்தால் அந்த நிறுவனத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவது எளிதான காரியமாக இருக்கவில்லை. இருப்பினும், அன்றைய உள்துறை அமைச்சரான எல்.கே.அத்வானி அந்த நிறுவனத்திற்குக் கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
இந்நிறுவனத்தின் வழியாக இலங்கைக்குள் வரும் சீன நாட்டின் நிறுவனங்கள், அதன் தொழில்நுட்பங்கள், மற்றும் பணியாளர்கள் சீன நிறுவனங்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பெரும் அளவில் உளவுப்பணி செய்ய முடிந்தது. ஏர்டெல்லின் தொலைதொடர்பு சகாவாக செயல்படும் ஹுவாவீ நிறுவனத்தின் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் மற்றும் வளர்ந்த பல நாடுகளில் பாதுகாப்பிற்காக இந்த நிறுவனம் தடைசெய்யப்பட்டுள்ளது . ( http://www.dnaindia.com/money/report_airtel-starts-mobile-services-in-sri-lanka_1220873 இந்த நிறுவனம்தான் இந்திய டாடாவின் டெல்கோவில் 2005ல் முதலீடுசெய்வதாக இருந்த 60 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்ததில் இருந்தது. இதை இந்திய அரசு பின்னர் தடுத்துவிட்டது. http://www.news.com.au/spy-fears-on-broadband-frontrunner/story-0-1111118351614 ) . இந்தியாவின் கண்களில் இருந்து தப்பித்து சீனாவின் உதவியுடன் தனது ராணுவ அறிவை உயர்த்திக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான, சட்டத்திற்கு புறம்பான போரினை நடத்த திட்டமிட்டு செயல்பட்ட இலங்கை அரசு, ஏர்டெல் நிறுவனத்தை இலங்கையின் சந்தைக்குள் கொண்டுவருவதன் மூலமாக ஏர்டெல்லின் தொழில் ஒப்பந்த நிறுவனமான சீன நிறுவனம் இலங்கைக்குள் சுதந்திரமாக வேலைசெய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்வாசல் வழியாக உள்ளே நுழைவதற்கு ஏர்டெல் நிறுவனம் அற்புதமான கருவியாக பயன்பட்டது. 2007ம் ஆண்டு, இலங்கை உச்ச கட்ட போருக்கான தயாரிப்புகளில் இருந்த போது இத்தகைய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த முக்கியமான காலகட்டத்தில் வேறு எந்த இந்திய நிறுவனத்திற்கும் இத்தகைய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவெண்டும். இந்த ஏர்டெல் நிறுவனம் 2008ஆம் ஆண்டு ஜனவரியில் அதாவது கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய முதல் வாரத்தில் தனது சேவையை ஆரம்பித்தது. இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்புவிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் தன் சேவையைத் துவங்க முடிவு செய்தது. 2007 ஏப்ரலில் அதற்கு ராஜபக்சே அனுமதி அளித்தார். 2007 செப்டம்பரில் இலங்கை முழுதும் தனக்கான தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பை நிறுவுவதற்கான 750 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை [எந்த நிறுவனம் சீன உளவுத்துறையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது என்று இந்திய உளவுத் துறையால் 2001 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டதோ அதே] ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் அளித்தது.
ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டும் காணாததுமாக விட்டுவிட்டது. தாலிபான் தீவிரவாதிகளுக்கு இன்றுவரை உதவிவரும் சீன உளவுத்துறையின் நீட்டிப்பாக செயல்பட்டுவரும் ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் அளித்ததைத் தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் அரசுதான் எல்.கே.அத்வானியை தாலிபான் தீவிரவாதிகளுக்கு 1999 ஆம் ஆண்டில் துணை போனார் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. (இதற்காக நாம் அத்வானியை ஆதரிப்பதாக எண்ணிவிட வேண்டாம்)

ஏர்டெல்லை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டிக்காததன் காரணத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள் இலங்கை முழுதும் பரந்து நிறைந்திருக்கிறார்கள். (சீனாவின் முற்றுகையில் இந்தியா- புத்தகம் ஆதாரங்களோடு அளிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்). இவ்வாறு நிறைவெற்றப்பட்ட தந்திரங்களினால் போரின்போது முக்கியமான தரவுகளை இந்த ஏர்டெல்–இலங்கை உறவினால் இலங்கை ராணுவத்தினற்கு கிடைத்திருக்கலாம். இதை போன்ற உதவியை ரிலையன்ஸோ, பி.எஸ்.என்.எல்லோ தந்திருக்குமா என்பதை உறுதிசொல்ல முடியாது. முக்கியதுவம் வாய்ந்த தகவல்களை பெற தொழில்நுட்பம் சிறந்து விளங்கும் நிறுவனங்களே உதவும் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய தொழில் நுட்பங்களில் இன்று சிறந்து விளங்குபவை சிங்கபூர் மற்றும் சீன நிறுவங்களே. இந்த நிறுவங்கள் தங்களுக்குள் தொழில் நுட்ப பகிர்வு மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாகவே உலகில் வணிகம் செய்து வருகிறார்கள். இப்படி பட்ட தொழில்நுட்பங்களை இந்த நிறுவங்கள் மூலமாக சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கைக்குள் தமது நோக்கம் நிறைவேற பல்வேறு வழிகளில் கொண்டுவந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டுகிறோம்.

போருக்கு முந்தய ஏர்டெல்லின் பங்களிப்பை பார்த்த நாம் அதன் போருக்கு பிந்தைய பங்களிப்பை கவனிப்போம். போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இலங்கையை பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீட்க உதவிய மற்றறொரு அமைப்பையும் அதன் ஏர்டெல் தொடர்பையும் பார்ப்போம் .
பிக்கி நிறுவனம்.
இந்த அமைப்பு, இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு. இந்திய அரசின் முடிவுகளில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய வலிமை வாய்ந்த பல பெரிய நிறுவனங்களின் கூட்டமைப்பு. இதன் சமீபத்திய ஒரு கோரிக்கையையும் அதன் பின்னணியையும் பார்த்தால் இந்த அமைப்பை நாம் முழுமையாக புரிந்து கொள்ளமுடியும்.
கடந்த 24 மே 2010, மாதத்தில் இந்தியாவின் ரேஷன்கடைகளை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளது, இது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்துள்ளதை நாம் கவனிக்கவேண்டும். தகுந்த காரணம் எதுவும் தராமல் அரசினால் சிறப்பாக மக்களுக்கு விநியோகம் செய்ய இயலவில்லை என்று சொல்லி இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள். வணிகம் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த எந்தொரு கொள்கையையும் இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் அரசு நிறைவேற்றுவது இல்லை. சரியாக சொன்னால் அரசின் பொருளாதார வணிக கொள்கைகளை , வரிகளை, தள்ளுபடிகளை, சலுகைகளை இதை போன்ற வெகு சில நிறுவனங்களே முடிவுசெய்கின்றன என்பது வணிகத்தில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
ஆக இந்த அமைப்பின் இந்த கோரிக்கையின் பின்னணியை பார்போம்
பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் உலகின் பெரும் சில்லரை நிறுவனமான வால்-மார்ட் உடன் இணைந்து தொழில் தொடங்கி லாபத்தை ஈட்டி உள்ளது. முழு வெளி நாட்டு முதலீடு தடைசெய்யப்பட்ட காரணத்தால் இந்த வால்-மார்ட் நிறுவனம் பாரதி ஏர்டெல் உடன் இனைந்து சந்தைக்கு வந்தது. (http://www.indiaretailbiz.com/blog/category/indian-retailers/bhartis/) நாட்டின் ரேஷன் கடைகளை தனியார்மயமாக்க ஃபிக்கி ( FICCI) சொல்ல காரணம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தை நாடு முழுவதும் விரிவாக்கி அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் இருந்து லாப நோக்கான விலைக்கு மாற்றுவதே. ஃபிக்கி ( FICCI) அமைப்பு பொதுமக்களுக்கு எதிரான செயல்களை லாப நோக்கிற்காக செய்ய தயங்குவதில்லை. இதன் தலைமை ராஜன் பாரதி மிட்டல் நேர்மையான வணிக நோக்கை வைத்திருப்பார் என்று கமலஹாசன் சொல்கிறார் . இந்த பிக்கி அமைப்பில் ஊடக பொழுதுபோக்கு துறையின் தலைவரராக இருக்கும் கமலஹாசன் இந்த நிறுவனம் காந்திஅடிகளால் நிறுவப்பட்டது என்றும் கூறுகிறார். இந்த ஊடக பொழுதுபோக்கு துறை எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது என்பதை பின்னால் பார்ப்போம். இவர் சொல்லும் கருத்து நம்ப இயலாதது திசை திருப்பகூடியது . இந்த பிக்கி நிறுவனம் ஈழ தமிழர்களுக்கு எதிராகவும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும் கொழும்பு நகரில் நடத்திய விழா தான் பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழா. நீங்கள் கவனிக்கவேண்டிய மற்றுமொரு தகவல் இந்த பிக்கியின் தலைவர் தான் ஏர்டெல்லின் நிறுவனர் தலைவர் ராஜன் பாரதி மிட்டல்
இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து ஆரம்பித்ததே ஏர்டெல் நிறுவனம்.
வால்-மார்ட் நிறுவனத்தின் அகில உலகத்தலைவர் இந்திய பிரதமரை நேரடியாக சந்தித்து முழு முதலீட்டை சில்லரை வணிகத்தில் அனுமதிக்குமாறு கேட்டுகொண்டும் உள்ளார். இது போன்ற நேரடி முதலீடும், ரேஷன் கடைகளை தனியார்மயப்படுத்துவதும் நமது மளிகைக் கடைகளை முடக்கும் திறன் கொண்டது. மேலும் ஊகவணிகத்தின் வழியாக இந்த நாட்டின் மக்களை சந்தையில் அடிமைகளாக நடத்த முடியும் (இதை பிறகொரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்). வால்-மார்ட் நிறுவனம் நமது வணிகத்தை முடக்கும் என்பதை உலகில் பல்வேறு இடங்களிலும், அமெரிக்காவிலும் இந்த நிறுவனத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களே சாட்சி.
ஐஃபா விருது வழங்கும் விழா.
உலக நாடுகளும், ஐ.நா.வும் சிறிலங்க அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக இழைத்த அநீதிகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அதன் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் வகையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஃபிக்கி (Federation of Indian Chambers of Commerce & Industry – FICCI), இந்தி திரையுலகத்துடன் இணைந்து தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை (India International film Academy Awards) திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளது.
ஜூன் 3,4,5ஆம் தேதிகளில் கொழும்புவில் ஐஃபா விருது வழங்கு விழா நடைபெற்றது. முதல் நாள் பாலிவுட் திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கு விழாவையும், மறுநாள், 4ஆம் தேதி உலக வணிக மாநாட்டையும், 3வது நாள் சிறிலங்க கிரிக்கெட் அணியுடன், பாலிவுட் நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியையும் நடத்தியது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியே மிக முக்கியமானதாகும். அன்று இலங்கையில் தங்களுடைய தொழில், வர்த்தக நிறுவனங்களைத் தொடங்க பல ஒப்பந்தங்கள் செய்துக்கொள்ள உலக வணிக மாநாட்டை (Global Business Conclave) திட்டமிட்டு நடத்தியது ஃபிக்கி அமைப்பு. இந்த வணிக மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது இணைய தளத்தில் அழைப்பு விடுத்திருந்த ஃபிக்கி அமைப்பு, இலங்கையை புதிய இலங்கை என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் கவர்ச்சிகரமான நாடு என்றும் வர்ணித்துள்ளது.
உலகமே இலங்கையை போர்க் குற்றவாளியாகவும், மனித உரிமை மீறல்களில் முன்னணியில் இருக்கும் நாடாகவும் குற்றம் சாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்நாட்டை ‘புதிய இலங்கை’ என்று புளங்காகிதத்துடன் வர்ணிக்கிறது ஃபிக்கி. பத்திரிக்கையாளர்களுக்கு மிக அபாயகரமான நாடு சிறிலங்கா என்று கூறுகிறது எல்லையற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு (Reporters Sans Frontier- RSF). ஆனால் அதனை வணிக வாய்ப்புகளை அள்ளித்தரும் கவர்ச்சிகர பூமி என்கிறது ஃபிக்கி!
IIFA –FICCI இலங்கையில் நடத்திய பாலிவுட் திரைபட விருது வழங்கும் விழா மேலும் இந்திய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் வர்த்தக ஒப்பந்த நிகழ்வு ஜூன் 4ம் தேதி நடைபெற்றது. இது தமிழர்களின் எதிப்பையும் மீறி நடந்த ஒன்று. இந்த விருது விழா மற்றும் வர்த்தக ஒப்பந்த விழா இரண்டும் இலங்கை அரசின் இனப்படுகொலை, போர் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பற்றப்படுவது மட்டும் அல்லாமல் இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கவும் நடைபெற்றது. இலங்கை அரசைப் பொறுத்தவரை, தமிழர்கள் மீது தொடுத்த போரினாலும், இனப் படுகொலை குற்றச்சாற்றாலும் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை மேம்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து செயலாற்றி வருகிறது. இந்த விழாவை ஃபிக்கியுடன் இணைந்து அங்கு நடத்தியது சிறிலங்க சுற்றுலா அமைச்சகமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈழத்தமிழர்களை பொழுதுபொக்கு போதைகளில் சிக்கவைப்பது, வணிகம் சார்ந்த விளையாட்டு துறைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழீழ போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வது உட்பட பல்வேறு சதிகளுடன் இந்திய நிறுவனங்கள் அரசுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
எனவேதான், தமிழின அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. தமிழ் திரைப்பட உலகும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் கொழும்பு ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஃபிக்கியும் ஐஃபாவும் நடத்தும் அந்த விழாவில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் நடித்துள்ள படங்கள் தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்கப்படாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக அமைப்பும், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும் அறிவித்தன.
ஆனால் இந்த எதிர்ப்பையெல்லாம் புறக்கணித்துவிட்டு பிக்கி திரைப்பட விருது வழங்கு விழாவையும், உலக வர்த்தக மாநாட்டையும் நடத்தி முடித்தது. ஆனால் தமிழர்களின் ஒற்றுமையான பல்வேறு தொடர் போராட்டங்களின் விளைவாக கொழும்பு ஐஃபா விழா பெரும் தோல்வியில் முடிந்தது. ஐஃபா விழா தோல்வி ராஜபக்ச அரசிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இத்தகைய தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசுடன் துணைபோன ஃபிக்கி நிறுவனத்தின் தலைவர் தான் ராஜன் பாரதி மித்தல்.
ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் ஃபிக்கியின் தலைவராக இருந்துகொண்டு சிறிலங்க அரசின் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஃபிக்கியின் தலைவர் மற்றும் ஏர்டெல்லின் நிறுவனர் என இரு பொறுப்புகளில் இருந்து கொண்டு இலங்கைக்கு அவசியமான மற்றும் தமிழினத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தவேண்டி உள்ளது. இந்த ஏர்டெல் நிறுவனத்தின் இந்திய சந்தை பின்னனியை கவனித்தால், இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1. 35 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்..
தமிழரின் எதிர்ப்பை மீறி கொழும்புவில் விழா நடத்திய ஃபிக்கி அமைப்பிற்கு எதிராக இதுவரை கண்டன, எதிர்ப்பு இயக்கங்களை நடத்திவந்த தமிழின அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அப்பாவித் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்த மறுக்கும் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்புப் போரையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஏர்டெல்லினை புறக்கணிக்க வேண்டியதின் அவசியத்தை தமிழினப்பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானமாக சென்ற ஆண்டு2009 செப்டம்பர் மாதத்தில் திரு.கா.அய்யாநாதன் அறிவித்து இருந்தார்.
தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்ற இந்திய நிறுவனங்களை அடையாளம் கண்டு நாம் அவர்களுக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்து பின்வாங்க செய்யவேண்டியுள்ளது.
நமது ஆற்றல் மற்றும் நமது ஆயுதம்.
இந்தியா ஒரு பெரிய லாபம் கொழிக்கும் சந்தை என்றால் இந்தியாவில் மிகவும் முன்னேறிய வாடிக்கையாளர்களை கொண்டது தமிழ்நாடாகும். தமிழர்கள் புறக்கணிக்க துவங்கினால் இந்தியப் பெரு நிறுவங்கள் துவண்டு போகும். தமிழ் நாட்டைவிட நேர்மையான, அதிகம் செலவழிக்ககூடிய, விரிந்த நகரமயமான சந்தை இந்தியாவில் இல்லை. இந்த சந்தை மதிப்பு ஆங்கில ஊடகங்களுக்கும் பொருந்தும். இருந்தாலும் இந்த நிறுவனங்கள் தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது தமிழர்கள் தமது ஆற்றலை உணராதது என்பதே. தமிழ் சந்தை முடங்கிபோனால் இந்த நிறுவனங்கள் நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க தயங்கும் என்பது மட்டும் அல்ல இவர்களின் நலனை முன்னெடுக்கும் இந்திய அரசின் கொள்கைகளையும் அவை பாதிக்கும்.
முன்னர் குறிப்பிட்டதைப்போல ஏர்டெல்லின் வாடிக்கையாளர்களில் தமிழர்கள் லாபம் தரும் வாடிக்கையாளர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்
நம்மிடம் வணிகம் செய்து அதன் இலாபத்தை ஒரு தமிழர் விரோத பாசிச சிங்கள அரசிற்கு உதவி செய்து வரும் நிறுவனங்களை நாம் எதிர்கொள்ளாமல் இருப்போமானால் அது எதிர்வரும் காலங்களில் நமக்கு விரோதமான சக்திகளுடன் இணைந்து நம்மை அழிக்கும் வாய்ப்பை நாமே அளித்ததற்கு ஒப்பாகும். தமிழினப்பாதுகாப்பு மாநாட்டில் அறிவித்த பொழுதே நமது எதிர்ப்பை பதிவு செய்ய ஆரம்பித்து இருந்தால் பாலிவுட் திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தும் எண்ணம் இந்த நிறுவனங்களுக்கு வந்து இருக்காது.
எனவேதான், நம்மினத்தை அழித்த இன வெறி சிறிலங்க அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஃபிக்கியை கண்டித்தும், ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய சமூக பொறுப்பை தட்டிக்கழித்து செயலாற்றிவரும் ஏர்டெல் சேல் பேசி சேவையை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க இனவெறி அரசுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் ஏர்டெல் செல் பேசிச் சேவையை புறக்கணிப்பது நமது முதல் கட்ட நடவடிக்கை.
புறக்கணிப்பு போராட்ட திட்டம்
தோழர்கள் தங்கள் ஊரில் அல்லது பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு ஏர்டெல் சிம் அட்டைகளை புறக்கணிக்க விரும்பும் தோழர்களின் பெயர், முகவரி, ஏர்டெல் எண் மற்றும் அவரது கையெழுத்துடன் ஒரு படிவத்தில் வாங்கி சேகரிக்கவும். ஜூலை 23,25ம் தேதி அன்று முதல் கட்டமாக நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் சிம் அட்டைகளை திருப்பி அளித்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம். கருப்பு ஜூலையில் ஆரம்பிக்கும் இந்த புறக்கணிப்பு போராட்டம், வரும் திலீபன் தினம், மாவீரர் தினம் என்று தொடர்ந்து நமது போராட்டத்தை பதிவு செய்யலாம். ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை முழுவதுமாக இழக்கும் வரை நமது போராட்டம் தொடரவேண்டும். இதற்கான விளக்க கூட்டத்தை தமிழகம் முழுவதும் மே பதினேழு இயக்கமும், தமிழின பாதுகாப்பும் செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் புறக்கணிக்கப்படும் எண்களை தொகுத்து அறிவிப்பதன் மூலம் போராட்டத்தின் வலிமையை அரசும், நிறுவனங்களும் உணர்ந்துகொள்ளும். இதன் மூலம் நம் போராட்டத்தின் ஆற்றல் அரசுக்கு உணர்த்தப்படுவதோடு மற்ற வணிக நிறுவங்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.
இதன் பிறகு எந்த வணிக நிறுவனமும் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட தயக்கம் காட்டவே செய்யும். நீங்கள் எந்தவொரு அமைப்பையும் சார்ந்தவராக இருக்கலாம், நீங்கள் சார்ந்து இருக்கும் அமைப்பின் பெயரிலேயே இந்த போராட்ட ஒருங்கிணைப்பை உங்கள் பகுதியில் செய்யலாம். போராட்டத்திற்கான கருத்துக்கள், படிவங்கள், துண்டு பிரசுரங்களை எங்கள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு எற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.

இனவெறி சிறிலங்க அரசின் பொருளாதார முதுகெலும்பை முறிப்போம்.

நாம் வெல்வோம்

நன்றி
திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்See More