உண்பவர்களுக்கு உபாதை இல்லை…
நோய்களை விரட்டும் சிறுதானியங்கள்…
இது நாகரிகப் பழக்கம் என்று வைத்துக் கொண்டாலும், பலருக்கும் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்களை சமைக்கத் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில், சிறுதானியங்களில் விதவிதமாக சமைக்கும் முறைகளைக் கற்றுக் கொடுத்து வருகிறது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த ‘அமுதக் களஞ்சியம்’ அமைப்பு.
சர்க்கரையைக் குறைத்த சிறுதானியங்கள் !
இந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ”நான் கிராமத்துலயே பிறந்து வளந்திருந்தாலும், கேழ்வரகைத் தவிர மத்த எந்த சிறுதானியத்தையும் பாத்ததே இல்ல. கல்யாணம் பண்ணிட்டு டவுனுக்கு வந்த பிறகு, அடிக்கடி உடம்பு சரியில்லாம டாக்டர்கிட்ட போக வேண்டியிருந்தது. ஒரு முறை, என் தம்பி இயற்கை விவசாயத்துல விளைஞ்ச அரிசியைக் கொடுத்தான். அதை சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, உடம்புல நல்ல மாற்றம் தெரிஞ்சுது.
அதுக்குப் பிறகு இங்க, சாமை, தினை, வரகு, குதிரைவாலி… மாதிரியான தானியங்களை சமைக்கற முறைகளைக் கத்துக்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சேன். எனக்கிருந்த சுகர், பி.பி. பிரச்னைகள் சுத்தமா குறைஞ்சிடுச்சு” என்றபடியே, தான் தயார் செய்திருந்த வரகரிசிப் பொங்கலை நம்முன் வைத்தார்.
அப்படியே சாப்பிடலாம் !
”எங்க வீட்டுக்காரர் இயற்கை விவசாயம் செய்றார். பாரம்பரிய உணவுகள் அவருக்குப் பிடிக்கும். வரகு, தினை, குதிரைவாலினு எதையாவது கொடுத்து சமைக்கச் சொல்லுவாரு. அதை சமைச்சுச் சாப்பிட்டு பாத்த பிறகு, அரிசி, ரவை, கோதுமை, மைதா எதையும் பயன்படுத்துறதே இல்லை. பூஸ்ட், காம்ப்ளான் மாதிரியான எதையும் கடைகள்ல வாங்கி என் குழந்தைகளுக்குக் கொடுக்கறதில்லை. அதுக்கு பதிலா சிறுதானியக் கஞ்சிதான் கொடுக்கிறேன். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடறாங்க” என்றார், அமைப்பின் மற்றொரு உறுப்பினரான தமிழ்ச்செல்வி.
டீயை விரட்டிய வரகரிசி சூப் !
அவரைத் தொடர்ந்த சாந்தாகுமாரி, ”என்னோட வீட்டுக்காரர் தினமும் பத்து டீ குடிப்பாரு. ஆனா, அவருக்கு வரகரிசி, முருங்கைக் கீரை சூப் கொடுத்து பழக்கினதுக்குப் பிறகு, டீ குடிக்கறதையே விட்டுட்டார்னா பாத்துக்கோங்க. ஜுரம் வந்து படுத்துருக்குறவங்களுக்கு இந்த சூப்பைக் குடிக்க கொடுத்தா நல்ல தெம்பு கிடைக்கும்” என்று கை வைத்தியத்தோடு சேர்த்துச் சொன்னார்.
விவசாயிகள்தான் விலை வைக்கிறார்கள் !
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அச்சுதன், ”தமிழகத்தில் பாரம்பரியமான சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் விளைவிக்கும் தானியங்களை வாங்கி, விவசாயிகள் நிர்ணயம் செய்யும் விலையிலேயே நாங்கள் விற்பனை செய்கிறோம். போக்குவரத்து, நிர்வாகச் செலவுக்காக ஒரு சிறுதொகையை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை விவசாயிகளுக்கே கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னார்.
கல்லீரலைக் காக்கும் வரகு !
சிறுதானியங்களின் சிறப்புகளைப் பற்றி பேசிய சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வேலாயுதம், ”சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் மாவுச்சத்து குறைவாகவும், நுண்சத்துகள் அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றைத் தொடந்து சாப்பிடும்போது, ரத்த ஓட்டம் சீராகவும், உடல் சோர்வு இல்லாமலும் இருக்கும். சாமையில் இருக்கும் நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. வரகுக்கு, கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் இருப்பதோடு, நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும் குணமும் உண்டு. கேழ்வரகுக்கு, குடல்புண்ணை குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு.
கோதுமையைக் குறையுங்கள் !
பசுமைப் புரட்சியால் நம்முடைய தட்பநிலையில், நம் மண்ணில் விளைந்த, நம்முடைய உடலுக்குப் பொருந்தக்கூடிய சிறுதானியங்கள் மறக்கடிக்கப்பட்டு, குறுகிய கால அரிசி ரகங்களும், கோதுமையும் நம்மிடம் புகுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவு… ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானியம் பணக்காரர்களின் உணவாகத் தோற்றமளிக்கிறது.
மானாவாரியில் விளையும் தானியங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பஞ்சாப்பில் விளையும் கோதுமையை நம்முடைய தலையில் கட்டுகிறார்கள். கோதுமை நம் உடலுக்குப் பொருந்தக்கூடிய உணவே அல்ல. கோதுமையில் குடலுக்கு ஒவ்வாமையைக் கொடுக்கும் குளுட்டின் என்ற நச்சுபொருள் இருக்கிறது. தொடர்ச்சியாக இதைச் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும்” என்ற வேலாயுதம் நிறைவாக,
”அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிக அளவிலும், மிதமான உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்த அளவிலும் சிறுதானியங்களைச் சாப்பிட்டு வந்தாலே… பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவரைத் தேடத் தேவையில்லை. இதைத்தான், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சொல்லி இருக்கிறார்கள்” என்றார் முத்தாய்ப்பாக.
தொடர்புக்கு:
அச்சுதன், செல்போன்: 99445-76343
வேலாயுதம், செல்போன்: 94449-08979
இப்படித்தான் சமைக்கணும் சிறுதானியங்களை…
வரகரிசி முருங்கைக் கீரை சூப் !
ஊற வைத்த வரகரிசி-2 ஸ்பூன், பாசிப்பருப்பு-1 ஸ்பூன், சாம்பார் வெங்காயம்-1, சுக்கு – ஒரு மொச்சை அளவு, மிளகு-6, திப்பிலி-2 ஆகியவற்றை 4 டம்ளர் தண்ணீரில் கலந்து நன்கு கொதித்த பிறகு, ஒரு பிடி அளவு முருங்கைக் கீரையை இட்டு, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கினால், சூப் தயார்.
குதிரைவாலி பாயாசம் !
குதிரைவாலி-100 கிராம், பாசிப்பருப்பு-50 கிராம் எடுத்துக்கொண்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். 200 கிராம் வெல்லத்தைத் தேவையான அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி இரண்டையும் ஒன்றாகக் கலந்து, முந்திரி, திராட்சை, நெய் ஆகியவற்றை இட்டுக் கொதிக்க விட்டால், பாயாசம் தயார்.
வரகரிசி முறுக்கு !
வரகரிசி-அரை கிலோ, உளுந்து-100 கிராம் எடுத்துக் கொண்டு ஒன்றாகக் கலந்து அரைத்து அதில் சிறிதளவு ஓமம், சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை இட்டு, தேவையான அளவுக்கு உப்பு கலந்த தண்ணீர் கலந்து, பிசைந்து… கொதிக்க வைத்த கடலை எண்ணெயில் பிழிந்து விட்டால், சுவையான முறுக்கு தயாராகி விடும்.
தினை வெண்பொங்கல் !
ஒரு பங்கு தினை அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். பிறகு, நெய் அல்லது எண்ணெயில் மிளகுப்பொடி, நறுக்கிய இஞ்சி, முந்திரி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தாளித்து, வேக வைத்த பொங்கலில் கலந்து கிளறினால் பொங்கல் தயார்.
தினை இனிப்புப் பொங்கல் !
ஒரு பங்கு தினை அரிசிக்கு, 4 பங்கு பால் கலந்து வேக வைத்து, தேவையான அளவுக்கு பனைவெல்லம் அல்லது சாதாரண வெல்லம் இட்டு இறக்கினால், இனிப்பான பொங்கல் தயார்.
நன்றி : பசுமை விகடன்
ரொம்ப நல்ல கட்டுரை. ஆரோக்யம் மனிதனின் உரிமை.அதை பெற உதவும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த ‘அமுதக் களஞ்சியம்’ அமைப்பு நமக்கு மிக அத்தியாவசியமான அமைப்பு. இது போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைப்பு வைத்து திணை,குதிரை வாலி,வரகு போன்றவற்றை மக்களுக்கு கிடைக்க செய்தல் அவசியம். நான் திருச்சி மாவட்டத்தில் இருக்கிறேன்.இங்கே எங்கு கிடைக்கும்.