எரிபொருள், கரன்ட் இதுக்கெல்லாம் இவ்வளவு தட்டுப்பாடு இருக்கற சமயத்துலயும், இப்படியரு அருமையான எரிபொருள் இருக்கறதை யாருமே கண்டுக்கலைனுதான் வருத்தமா இருக்கு” என்று வேதனையோடு பேசுகிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலூகா, வேட்டைக்காரன்இருப்பு, கண்டியன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்.
இவர் குறிப்பிடும் அருமையான எரிபொருள்… புன்னை எண்ணெய்! கடந்த 10.10.2008-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘டீசலோடு போட்டிப் போடும் புன்னை’ என்ற தலைப்பில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தி, இன்ஜினை இயக்கி தண்ணீர் பாய்ச்சி வரும் இவரைப் பற்றியும், அதன் தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதியிருக்கிறோம்.
தற்போது, மாற்று எரிசக்தி சிறப்பிதழுக்காக சந்தித்தபோதுதான், ‘முதல் பாரா’ வேதனையைப் பகிர்ந்தார். தொடர்ந்தவர், ”முன்ன பெரும்பாலான கோவில்கள்ல புன்னை மரங்கள் இருந்துச்சு. இப்ப அதெல்லாம் எங்க போச்சுனே தெரியல. இது, ரொம்ப உறுதியான மரம்கிறதால, புயல் அடிச்சாகூட சாயாது. எல்லா வகையான மண்லயும் வளரும்னாலும், கடற்கரை ஓரங்கள்ல அதிகமா பாக்க முடியும். அஞ்சு வருஷத்துல காய்ப்புக்கு வந்துடும். எங்க தோட்டத்துல 30 வயசான ரெண்டு புன்னை மரங்கள் இருக்கு. இதுல உள்ள பழங்களை வெளவால்கள் தின்னுட்டு, கொட்டையை கீழ போட்டுடும். இதன் மூலமாவே வருஷத்துக்கு 300 கிலோ கிடைச்சுடும். நல்லா காயவெச்சு, ரெண்டு தடவை உடைச்செடுத்தா… 150 கிலோ கிடைக்கும். செக்குல கொடுத்து ஆட்டுனா, 100 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.
என்கிட்ட உள்ள 5 ஹெச்.பி மோட்டார்ல, இந்த எண்ணெயை ஊத்திதான் இப்பவரைக்கும் ஓட்டிக்கிட்டிருக்கேன். 600 மில்லி எண்ணெய் ஊத்தினா, ஒரு மணி நேரத்துக்கு ஓடுது. டீசலா இருந்தா… 900 மில்லி ஊத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு விவசாயியும் ரெண்டே ரெண்டு புன்னை மரங்களை வெச்சுருந்தாலே… டீசல் செலவை பெருமளவுக்குக் குறைச்சுடலாம்” என்ற ராஜசேகரன் நிறைவாக,
”ஏற்கெனவே ‘பசுமை விகடன்’ல வந்த செய்தியைப் பாத்துட்டு, வனத்துறை உயரதிகாரி இருளாண்டி, என்னை பல ஊர்களுக்கு அழைச்சிட்டுப் போய் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள்ல பேச வெச்சார். தமிழக அரசு, இன்னும் சிறப்பு கவனம் செலுத்தி, விவசாயிகள்கிட்ட இதைப் பரவலாக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமி கவனத்துக்கு நாம் கொண்டு சென்றபோது, ”இதைப் பத்தி இப்பதான் கேள்விப்படுறேன். கண்டிப்பா நேர்ல போய் பார்த்து ஆய்வுகள் செஞ்சு, அரசாங்கத்தோட கவனத்துக்குக் கொண்டு போவேன்’’ என்று நம்பிக்கையான வார்த்கைகளைப் பகிர்ந்தார்!
தொடர்புக்கு,
செல்போன்: 97510-02370
நன்றி : பசுமை விகடன்