”அவ்வளவு பணம் கொடுக்க முடியாது… கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதி வைக்கிறேன்”

ருத்துவமனைகள் அநியாயமாகப் பணம் பிடுங்குகின்றன என்​பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் இருந்தே ஊழ லுக்கான அஸ்திவாரங்கள் ஆரம்பம் ஆகின்றன என்பதைத்தான் சமீபத்திய சி.பி.ஐ. ரெய்டுகள் உணர்த்துகின்றன! 

கடந்த சில மாதங்களாகவே சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு சி.பி.ஐ. போலீஸுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக இரண்டு பேர் மீது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன். அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர். எஸ்.ஆர்.எம். பல் மருத்துக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருந்தவர். இன்னொருவர் அரசியல் ஆத ரவு பெற்ற சீனியர் டாக்டர். முருகேசனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊதுகுழலாகச் செயல்படுகிறவர்.  

இந்த இரட்டையர் கடந்த ஒரு வருடமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக புகார்கள் கிளம்பின.

‘கல்லூரியின் தரம் குறித்து ஏதாவது குறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். அதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், எங்களுக்குப் பணம் தர வேண்டும்’ என்று வெளிப்படையாகவே செல்போன் மூலம் மிரட்டுவார்களாம். இந்தப் புகார்கள்​தான் மத்திய அரசுக்குப் பறந்தன.

குறிப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல் படுத்தாமல் இருக்க, இத்தனை கோடிகள் வேண்டும் என்ற தகவலை கல்லூரி நிர்வாகிகள் மத்தியில் பரப்பி விட்டனர். ‘இந்த இருவரின் இலக்கு பல கோடி ரூபாய். அதை மிரட்டிப் பிடுங்க பல்வேறு வகைகளில் செயல்படுகிறார்கள்’ என்ற விவரங்களுடன் மத்திய அரசுக்கு ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் போனது.

சென்னை புறநகரை ஒட்டிய கல்லூரி அது கடந்த சில வருடங்களாக அதற்கு மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் கிடைக்க​வில்லை. சமீபத்தில் சில கோடி கைமாறியதாம். உடனே, அந்தக் கல்லூரி கேட்டது கிடைத்தது. அதேபோல், சென்னை – காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒட்டிய இன்னொரு கல்லூரி. இங்கும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதை சரிசெய்ய எவ்வளவோ தகிடு தத்தங்கள் செய்தும் நடக்கவில்லை. இப்போது அந்தக் கல்லூரிக்கும் பச்சை சிக்னல் கிடைத்து விட்டது.

இந்த இரண்டு கல்லூரிகளும் எப்படி மீண்டும் அனுமதி பெற்றன? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் துருவினர். அங்குள்ள அடிப்படை வசதி வாய்ப்புகள் விவரத்தை சேகரித்துத் திடுக்கிட்டனர். இதன் பின்னணியிலும் இரட்டையரின் பங்களிப்பு இருக் குமா என்கிற சந்தேகம் சி.பி.ஐ.-க்கு இப்போது எழுந் துள்ளது.  

இது இப்படி இருக்க.. தமிழகத்தை சேர்ந்த டெல்லி மாண்புமிகு  ஒருவருக்கு சமீபத்தில் போன் வந்தது – சென்னையில் உள்ள கோட்டைப் பிரதிநிதியின் அறையில் இருந்து பேசுவதாகச் சொன்ன அந்தக் குரல்…

”சார்… நீங்கள் முப்பது கோடி உடனே கொடுங்கள். இல்லைன்னா, சர்ப்ரைஸ்-ஆக உங்கள் கல்லூரிக்கு விசிட் வர நேரிடும்’’ என்று சொல்ல..

”அந்த அளவுக்குப் பணம் கொடுக்க முடியாது. வேண்டுமானால், என் கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதிக் கொடுத்து விடுகிறேன். நேரில் வாங்க” என்று சொல்லி ரீசீவரை வைத்தாராம் கோபமாக. அடுத்த நிமிடமே, இந்த போன் மிரட்டல் குறித்து பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தினாராம்.

மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றின் முக்கியப் பொறுப்பாளர், சென்னை புறநகரில் உள்ள கல்லூரி ஒன்றின் முக்கியஸ்தர்… இருவரையும் திடீரென அவரவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். தங்களுக்கு சரிப்பட்டு வராத காரணத்தால், அந்த இரட்டையர்கள் திருவிளை​யாடல்களால் இவர்கள் தூக்கி அடிக்கப்பட்டதாக சி.பி.ஐ-க்குத் தகவல் போனது.

இந்த விவகாரங்களைத் தோண்டித் துருவிக்கொண்டு இருந்தபோதுதான், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி விவகாரம் பற்றி சி.பி.ஐ-க்குத் தகவல் எட்டியது. அதையும் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அட்வான்ஸ் பணம் ஒரு கோடி ரூபாய் கைமாறும் இடம் பிரபல கல்லூரி வளாகம் என்று முதலில் தகவல் வந்ததால், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அங்கேயே முற்றுகையிட்டனர். ஆனால், அங்கே சந்திப்பு நடக்கவில்லை. அதையடுத்து, ஆதி பராசக்தி கல்லூரித் தரப்பினர் முதலில் லஞ்சப் பணம் கொடுக்க, முருகேசனின் நண்பரான சீனியர் டாக்டரை தேடினர். அவர் அந்த நேரம் இல்லாததால், டாக்டர் முருகேசனின் க்ளினிக்குக்கு கல்லூரி தரப்பினர் சென்றனர். முதல் கட்டமாக 25 லட்சம் கைமாறியபோது, ரெய்டில் சிக்கினர்.  

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ”பணத்​துடன் பிடிபட்ட டாக்டர் முருகேசன் தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றார். ஆனால், பணத்தைக் கொடுத்தவர்கள் இன்ன காரணத்துக்காகத்தான் பணத்தைக் கொடுத்தோம் என்று தெள்ளத்தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டனர். கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப் ஐசக் என்பவர் சர்ப்ரைஸ் ஆய்வு என்ற பெயரில் தனது கல்லூரியில் முருகேசனின் நடவடிக்கை குறித்து கடந்த ஆண்டே புகார் கிளப்பி இருந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம்தான் முருகேசன் அகில இந்தியப் பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினராக ஆகியிருக்கிறார். அதுவே சர்ச்சையாகி கோர்ட் வரை போயிருக்கிறது. முருகேசனின் நெருங்​கிய உறவினர் ஒருவர், பல் மருத்துவத் துறையின் முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைப்​பற்றியும் விசாரிக்கிறோம். மூன்று சொகுசு கார்களை சமீபத்தில் முருகேசன் வாங்கியிருக்கிறார். இந்த மொத்த விவகாரங்களிலுமே முருகேசனின் நண்பரான சீனியர் டாக்டரும் சம்பந்தப்பட்டு இருப்பதாகப் பல்வேறு புகார்கள் வந்திருக்கின்றன. இந்த ரெய்டில் நண்பர் சிக்கா விட்டாலும், வந்துள்ள புகாரின் அடிப்படையில் தேவையானால், அவரை அழைத்து விசாரிப்போம்” என்கிறார்கள்.

நாட்டுக்கே வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கிறது!

ஆர்.பி.

நன்றி : ஜூனியர் விகடன்