சென்னை: காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரான திருமதி ஒய்ஜிபிக்கு தமிழக அரசின் ஔவையார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஜெயலலிதா இன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவி்ன்போது வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடந்தன. பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று சிறப்பித்தார்.
கபிலர் விருது முனைவர் மணவாளனுக்கும், உ.வே.சா. விருது புலவர் ராசுவுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த பெண்மணிக்கான ஔவையார் விருது திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதுகள் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தகுதி சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டது. இதேபோல 2010-ம் ஆண்டில் வெளிவந்த 27 தமிழ் நூல் ஆசிரியர்களும் சிறப்பு செய்யப்பட்டனர். சிறந்த தமிழ் நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், அவற்றின் பதிப்பகத்தாருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டது. இவற்றையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அந்த சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசும், விருதும் கொடுக்கப்பட்டது. முன்னதாக ‘துறைதோறும் தமிழ்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலை வகித்தார். பழ.கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பொன்னையன், மேயர் சைதை துரைசாமி, நடிகர் சிவக்குமார், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை, முனைவர் கோமதிநாயகம் ஆகியோர் பேசினார்கள்.
இதையடுத்து ‘முத்திரை பதிக்கும் சித்திரை’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. இதை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அமைச்சர் சிவபதி முன்னிலை வகித்தார். புலவர் புலமைப்பித்தன் தலைமையில் நடந்த இந்த கவியரங்கத்தில் கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் ரேவதி, யுகபாரதி, தங்க.காமராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
பட்டிமன்றம்
அதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவிடம் விஞ்சி இருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே என்ற தலைப்புகளில் பட்டிமன்றம் நடந்தது. இதை சபாநாயகர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலை வகித்தார். பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார்.
‘அஞ்சாத துணிவே’ என்ற தலைப்பில் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஆகியோர் பேசினார்கள். ‘அளவற்ற அறிவே’ என்ற தலைப்பில் வைகைச்செல்வன் எம்.எல்.ஏ., கவிஞர் எழிலரசி ஆகியோரும், ‘நெஞ்சார்ந்த கனிவே’ என்ற தலைப்பில் மணிகண்டன், பேராசிரியர் மலர்விழி ஆகியோரும் பேசினார்கள்.