சென்னை: லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பிலான இலங்கை இனப்படுகொலை குறித்த வீடியோ படத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவி 3 நாட்களுக்கு ஒளிபரப்பவுள்ளது.
ஈழப் பிரச்சினை குறித்து இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மீடியாக்கள் ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது. இலங்கை அரசுக்கு சாதகமான செய்தி என்றால் மட்டுமே அவை செய்திகளை ஒளிபரப்பும். இலங்கை அரசு என்ன செய்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை.
லண்டனைச் சேர்ந்த, தமிழர்களுக்கு சற்றும் ரத்த சம்பந்தமோ, கலாச்சார சம்பந்தமோ இல்லாத சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினர்இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகளை வெளியிட்டு உலகையே உலுக்கியபோதும் அதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாதவை நமது இந்திய ஆங்கில ஊடகங்கள்.
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இலங்கையில் போரின் கடைசிக்கட்டத்தில் நடந்த மிகக் கொடூரமான இனப்படுகொலை சம்பவங்களின் தொகுப்பைப் பார்த்து இங்கிலாந்து நாடாளுமன்றமே அலறியது. ஆனால் இந்தியாவில் மட்டும் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆங்கில மீடியாக்கள் அதை ஒரு செய்தியாகக் கூட பார்க்கவில்லை, வெளியிடவில்லை.
இப்படிப்பட்ட துயரமானநிலையில், ஹெட்லைன்ஸ்ட் டுடே இலங்கையின் கொலைக்களம் வீடியோ படத்தை ஒளிபரப்பவுள்ளது.
ஜூலை 7ம் தேதி இரவு 11 மணிக்கும், ஜூலை 8ம் தேதி இரவு பத்து மணிக்கும், ஜூலை 9ம் தேதி இரவு 11 மணிக்கும் இந்த வீடியோ டாக்குமென்டரி படம் ஒளிபரப்பாகவுள்ளது.