கருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!
எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்… மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் – எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ”எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!” – இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ”என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்… பார்த்தீங்கள்ல… அதுதான் நடந்திருக்கு!” என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!
Continue reading…