25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.
நன்றி : ஆனந்த விகடன்.
”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத்தான் நான் முதன்முதலில் பெரியவரைப் பார்த்தேன்.
திரு.வெங்கடாசலபதி என்பவரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்கமாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, எதிரில் சற்றுத் தள்ளி, பெரியவரும் அவரோடு இரண்டு மூன்று பேரும் வந்துகொண்டு இருந்தார்கள்.
”இவர்தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்பர். காங்கிரஸ் ஊழியர்கள் எல்லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு புகழ்ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆகையால், அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது.
இப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. மேலும் அவரோ, தன் சகாக்களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘அறிமுகத்துக்கு இது ஏற்ற தருணம் அல்ல’ என்று எண்ணி, பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே நடந்து சென்றுவிட்டேன்.
இது நடந்தபோது எனக்கு 27 வயது இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சேவாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாணவர்களுக்காக, ஹரிஜன சேவா சங்கம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியில் நாலணா மெம்பர். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்டது இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தேன். இங்கிலீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால், இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்து சேர்ந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, மேலூரில் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என்னை அனுப்பினார்கள். அங்கே ஹாஸ்டல் வார்டனாக இருந்துகொண்டு, கட்சி வேலைகளிலும் ஈடுபட்டேன். அந்த தாலுக்கா காங்கிரஸ் கமிட்டிக்கு நான்தான் தலைவர்.
படிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரியவரும் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தார். என்னைப்பற்றி அவரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந்தது.
1942 போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைக்குப் போய், ஒன்றரை வருஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியும் மேலூருக்கு வந்து ஹாஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழியராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் நானும் ஓர் ஊழியன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக்குத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அசைக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது.
1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன்முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒருவர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!’ என்றார் பெரியவர்.
‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது!’ என்று கூறிய நான், ‘என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியர்களுக்குத்தான் கிடைக்கும்!’ என்றேன்.
‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்றுமை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்!’ என்று பெரியவர் ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
அந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும் அவர் பொறுமையோடும் – நிதானத்தோடும் நடந்துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.
இதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழியராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற்றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித்துப் போற்றுகிறேன். ஆனால் பெரியவரோ, அன்றும் சரி – இன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
எங்களிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு, சாதாரணமானதாக இருந்தாலும், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்கமும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத்தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரார்த்திக்கிறேன்!”